இந்தியாவிடம் வீழ்ந்தது தெ. ஆப்ரிக்கா

பதிவு செய்த நாள் : 05 ஜூன் 2019

நாட்டிங்காம்


உலக கோப்பையை இந்தியா வெற்றியுடன் துவக்கியது. ‘சுழலில்’ சகால் அசத்த, ரோகித் சதம் அடித்து கைகொடுக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை  வீழ்த்தியது. இது தென் ஆப்ரிக்காவின் ‘ஹாட்ரிக்’ தோல்வியாகும்.

இங்கிலாந்து மண்ணில் ஐ.சி.சி., உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சவுத்தாம்ப்டனில் இன்று நடந்த 8வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியாவை எதிர்த்து தென் ஆப்ரிக்கா மோதியது. முதலிரண்டு போட்டியில் தோற்றதால் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் தென் ஆப்ரிக்கா இருந்தது. அதே நேரம் இந்தியாவுக்கு இது முதல் போட்டியாகும்.

பலத்த எதிர்பார்ப்பிற்கு இடையே போட்டி துவங்கியது. இதில், 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசி முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்தார். இந்திய  அணியில் காயத்திலிருந்து மீண்ட கேதர் ஜாதவ் இடம் பிடித்தார். 'வேகத்தில்' பும்ரா, புவனேஷ்வர், 'சுழலில்' சகால், குல்தீப் இடம்பிடித்துள்ளனர். ஜவேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழகத்தின் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கருக்கு இடம் கிடைக்கவில்லை. தென் ஆப்ரிக்க அணியில் ஆம்லா மீண்டும் அணிக்கு  திரும்பினார்.

தென் ஆப்ரிக்க அணிக்கு பும்ரா வேகத்தில் தொல்லை கொடுத்தார். இவரது பந்துவீச்சில் துவக்க வீரர்களான ஆம்லா (6), குயின்டன் டி காக் (10) ஆட்டமிழந்தனர். ஆடுகளம் துவக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததை பும்ரா சரியாக பயன்படுத்திக் கொண்டார். இவர் எடுத்த இந்த இரண்டு விக்கெட்டில் குயின்டன் டி  காக்கை கோஹ்லி சொல்லிவைத்து ஆட்டமிழக்கச் செய்தார். போட்டியின் 6வது ஓவரை வீசினார் பும்ரா. முதல் பந்து வீசிய போது சிலிப் பகுதியில் இரண்டு  பீல்டர்கள் நின்றனர். பந்து நன்றாக எகிறி வருவதை கவனித்த கேப்டன் கோஹ்லி, கூடுதலாக ஒரு பீல்டரை நிறுத்தினார். மூன்றாவது சிலிப் ஆக கோஹ்லி நின்றார்.  இவர் கணித்தபடியே 5வது பந்தில் குயின்டன், கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து திரும்பினார். போட்டியை வர்ணனை செய்த இந்திய அணி முன்னாள் கேப்டன்  கங்குலி, கோஹ்லியின் செயலை பாராட்டினார்.

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் சரிந்த நிலையில், கேப்டன் டுபிளசியுடன் வான்டர் டுசன் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி வந்தனர். தென் ஆப்ரிக்கா ஓரளவு மீண்டு நிலையில், சுழற்பந்துவீச்சாளர் சகால் ஓரே ஓவரில் வான்டர் டுசன் (22), கேப்டன் டுபிளசியை (38) கிளீன் போல்டாக்கி   அசத்தினார். ‘சைனாமேன்’ குல்தீப் சுழலில் டுமினி (3) சிக்கினார். இதையடுத்து தென் ஆப்ரிக்கா 5 விக்கெட்டுகளை இழந்து 89 ரன் எடுத்து திணறியது. இந்த  நிலையில், மில்லருடன் பெலுக்வாயோ இணைந்தார். இருவரும் சிறபபான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். 25வது ஓவரில் தென் ஆப்ரிக்கா 100 ரன் கடந்தது.

மீண்டும் பந்துவீச வந்த சகால் இம்முறை மில்லர் (31), பெலுக்வாயோ (34) விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி கட்டத்தில் கிறிஸ மோரிஸ் அதிரடியில் இறங்கினார். இவருக்கு ரபாடா கம்பெனி கெஆடுக்க சரிவிலிருந்து தென் ஆப்ரிக்கா மீண்டது. 45.5 ஓவரில் தென் ஆப்ரிக்கா 200 ரன் எடுத்தது. இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு  66 ரன் சேர்த்த நிலையில், புவனேஷ்வர் குமார் பந்தில் மோரிஸ் ஆட்டமிழந்தார். இவர் 42 ரன் (34 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். ஆட்டத்தின் கடைசி  ஓவரை புவனேஷ்வர் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் இம்ரான் தாகிர் (0) வெளியேற தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள்  எடுத்தது. ரபாடா (31) அவுட்டாகாமல் இருந்தார். இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய சகால் 4 விக்கெட் சாய்த்தார். பும்ரா, புவனேஷ்வர் கமார் தலா 2, குல்தீப்  1 விக்கெட் சாய்த்தனர்.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, தவான் இருவரும் துவக்கம் தந்தனர். வேகத்தில் ரபாடா மிரட்ட இருவரும் திணறினர். தவான் 8  ரன் மட்டுமே எடுத்த நிலையில், ரபாடா ‘அவுட் ஸ்விங்’கரில் விக்கெட்கீப்பர் குயின்டன் டி காகிடம் கேட்ச் கொடுத்து ஆடுடமிழந்தார். அடுத்து கேப்டன் கோஹ்லி  களம் வந்தார். தடுமாறிய ரோகித், பின் சற்றே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரபாடாவின் ஒரு ஓவரில் ரோகித் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசினார்.  பொறுபபுடன் விளையாடி வந்த கோஹ்லி, பெலுக்வாயோ பந்தில் விக்கெட்கீப்பர் குயின்டன் டி காக்கால் அபாரமாக கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். கோஹ்லி 18 ரன் மட்டுமே எடுத்து அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த நிலையில், ரோகித்துடன் ராகுல் இணைந்தார். இவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். 25.5 ஓவரில் இந்தியா 100 ரன் கடந்தது. இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 85 ரன் சேர்த்த நிலையில், மீண்டும் ரபாடா திருப்புமுனை தந்தார். இவரது வேகத்தில் ராகுல் (26) சரிந்தார். பலத்த கரகோஷத்திற்கு இடையே தோனி  களம் வந்தார். தோனி துடுமாற்றத்துடன் விளையாடிய நிலையில், ரோகித் அசத்தினார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது  23வது சதத்தை பதிவு செய்ய அரங்கமே அதிர்ந்தது. இவர் 128 பந்தில் சதம் அடித்தார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ரோகித்தின் 3வது சதம் இதுவாகும். உலக  கோப்பையில் இவரது இரண்டாவது சதம். 48 பந்தில் 49 ரன் தேவைப்பட்டது.

இந்திய ணி 44.1 ஓவரில் 200 ரன் எடுத்த போது வெற்றி உறுதியானது. வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்ட நிலையில் மோரிஸ் பந்தில் தோனி (34) ஆட்டமிழந்தார். ரோகித்துடன் பாண்ட்யா இணைந்தார். பெலுக்வாயோ பந்தில் பாண்ட்யா பவுண்டரி விளாச இந்திய அணி 47.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 122 (144 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்), பாண்ட்யா (15) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா தரப்பில் ரபாடா 2,  மோரிஸ், பெலுக்வாயோ தலா 1 விக்கெட் சாய்த்தனர்.சதம் அடித்த ரோகித் சர்மா ஆட்டனாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

உலக கோப்பையை இந்தியா வெற்றியுடன் துவக்கிய அதே நேரத்தில் தென் ஆப்ரிக்கா ‘ஹாட்ரிக்’ தோல்வி அடைந்தது. உலக கோப்பையில் தென் ஆப்ரிக்கா  ‘ஹாட்ரிக்’ தோல்வியை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.