சச்சினை மாற்றிய ரிச்சர்ட்ஸ்

பதிவு செய்த நாள் : 05 ஜூன் 2019

லண்டன்


இந்திய அணி ஜாம்பவான் சச்சினின் ஓய்வு முடிவை ரிச்சர்ட்ஸ் மாற்றிய விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த 2007 உலக கோப்பை தொடரில் டிராவிட் தலைமையிலான இந்திய அணி, இலங்கை, வங்கதேசத்திடம் தோற்க, லீக் சுற்றுடன் திரும்பியது. இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. 3 போட்டியில் சச்சின் 64 ரன்கள் மட்டும் எடுத்திருந்தார். இதையடுத்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது என முடிவெடுத்தார் சச்சின். பின் மனதை மாற்றிக் கொண்ட இவர், 2013, நவம்பர் மாதம் முழுமையாக ஓய்வு பெற்றார்.

அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து சச்சின் தற்போது கூறியதாவது: அந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட்டினை சுற்றி நடந்த சம்பவங்கள் சிறப்பாக இருக்கவில்லை. அணியில் பல்வேறு மாற்றங்கள் தேவைப்பட்டன. இவை நடக்கவில்லை எனில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என முடிவு எடுத்தேன். 90 சதவீதம் இதுபோல நடக்க இருந்தது. அப்போது எனது சகோதரர், 2011 உலக கோப்பை பைனல் மும்பையில் நடக்கும். அதில் சாதித்து உனது கையில் கோப்பை இருப்பது போல நினைத்துப் பார், எப்படி இருக்கும், என்றார்.

இதன் பின் எனது பண்ணை வீட்டில் தங்கியிருந்தேன். அப்போது ஜாம்பவான் வீரர் விண்டீஸ் அணியின் விவியன் ரிச்சர்ட்சிடமிருந்து தொலைபேசி அழைப்பு    வந்தது. அதில், இன்னும் ஏராளமான திறமை வெளிப்படுத்த வேண்டும். இப்போது ஓய்வு பெற வேண்டுமா? என்றார். எனது பேட்டிங் ஹீரோ அழைத்து சுமார் 45 பேசியதால் மனது மாறியது. இதன் பின் இன்னும் சிறப்பாக திறமை வெளிப்படுத்த துவங்கினேன். இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.