இந்தியாவை வீழ்த்த வாய்ப்பு

பதிவு செய்த நாள் : 05 ஜூன் 2019

சவுத்தாம்டன்


உலக கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் விளையாடுவதால் பதற்றத்துடன் இருக்கும். இதைப் பயன்படுத்தி தென் ஆப்ரிக்கா வெற்றி பெற     வாய்ப்புள்ளதாக காலிஸ தெரிவித்தார்.

உலகின் ‘டாப்&10’ அணிகள் மோதும் 12வது உலக கோப்பை ஒருநாள் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இந்த மெகா தொடரில் இந்திய அணி தனது துவக்க ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது. இப்போட்டி சவுத்தாம்டனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு துவங்குகிறது. இந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்த தென் ஆப்ரிக்காவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் காலிஸ் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

உலக கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 2 தோல்வி அடைந்தது அதிர்ச்சியாக உள்ளது. இதனால், இந்தியாவுக்கு எதிரான இன்றைய  போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் டுபிளசி உள்ளார். ஒருவேளை இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்ரிக்கா தோற்றால் உலக கோப்பை பயணம் முடிவுக்கு வந்துவிடும். அதே நேரம் இந்த தொடரில் இந்திய அணி முதல் முறையாக களமிறங்க உள்ளது. இது தென் ஆப்ரிக்காவுக்கு சாதகமாக இருக்கும்.  

அதாவது இந்திய அணி ஒரு வாரமாக விளையாடவில்லை. முதல் ஆட்டத்தில் ஆடுவதால் அந்த அணியினருக்கு பதற்றம் உருவாகலாம். இது தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெறுவதற்கு உதவியாக இருக்கக்கூடும். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி சிறிய தவறு செய்தாலும் தோல்வியை சந்திக்க நேரிடும். தென்ஆப்பிரிக்க அணி மீதம் உள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அரைஇறுதிக்கு முன்னேற முடியும். இவ்வாறு காலிஸ் கூறினார்.