காயத்தால் லுங்கிடி விலகல்

பதிவு செய்த நாள் : 05 ஜூன் 2019

சவுத்தாம்ப்டன்


தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் லுங்கிடி, தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இருந்து விலகினார்.

லண்டனில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் வங்கதேச அணி  21 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை  வீழ்த்தியது.  இப்போட்டியில் தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் லுங்கிடி, இடது கால் தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் வெளியேறினார். இவர், 4 ஓவர் மட்டுமே வீசினார். தற்போது இவருக்கு 10 நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது. இதனால் இவர், இந்தியாவுக்கு எதிராக சவுத்தாம்ப்டனில் நாளை நடக்கவுள்ள லீக் போட்டியில் இருந்து விலகினார். லுங்கிடிக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஸ்டைன் விளையாட வாய்ப்பு உள்ளது. ஒருவேளை ஸ்டைன், முழு உடற்தகுதி பெறவில்லை என்றால், கிறிஸ் மோரிஸ் பங்கேற்பார்.

இதுகுறித்து தென் ஆப்ரிக்க அணியின் டாக்டர் முகமது மூசாஜீ கூறுகையில், இடது கால் தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் லுங்கிடிக்கு 10 நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது. இதனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இவர் விளையாடமாட்டார். வரும் 10ல் சவுத்தாம்ப்டனில் நடக்கவுள்ள விண்டீசுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பார் என நம்புகின்றோம், என்றார்.

ஆம்லா ரெடி: இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து ஹெல்மெட்டில் தாக்கியதால் நிலைகுலைந்த தென் ஆப்ரிக்காவின் ஆம்லா, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரும் இவர், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாக      கூறப்படுகிறது.