வங்கதேசம்-நியூசி., மோதல்

பதிவு செய்த நாள் : 05 ஜூன் 2019

லண்டன்


உலக கோப்பை தொடரில் இன்று நடக்க உள்ள இரண்டாவது லீக் போட்டியில் நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

ஐ.சி.சி., நடத்தும் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, 2வது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட ‘டாப்-10’ அணிகள் பங்கேற்கின்றன. லண்டனில் இன்று நடக்க உள்ள 10வது லீக் போட்டியில் நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மாலை 6 மணிக்கு துவங்குகிறது. தரவரிசையில் நியூசி., 4, இலங்கை 9வது இடத்தில் உள்ளன.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி துவக்க ஆட்டத்தில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இதுவரை உலக கோப்பையை கைப்பற்றாத நியூசிலாந்து அணி கடந்த முறை அதிகபட்சமாக 2வது இடத்தைப் பிடித்து சாதித்தது. இந்த அணி கடந்த ஓராண்டாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங், பவுலிங் இரண்டிலும் நியூசி., சமபலத்துடன் உள்ளது. இலங்கைக்கு எதிராக கப்டில், மன்ரோ இருவரும் அரைசதம் அடித்தனர். வில்லியம்சன், டெய்லர், லதாம், கிராண்ட்ஹோம், நீஷம் என பேட்டிங் வரிசை மிரட்டலாக உள்ளது. பந்துவீச்சில் சவுத்தீ, பவுல்ட், பெர்குசன் அடங்கிய வேக கூட்டணி எதிரணிக்கு கடும் நெருக்கடக தருகிறது. ‘சுழலில்’ சான்டனர் கைகொடுக்கிறார். பவுலிங்கிற்கு பலம் சேர்க்கும் வகையில் அணியின் பீல்டிங் உள்ளது. பவுலிங்கில் அதிக கவனம் செலுத்தும்பட்சத்தில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்வதில் சிக்கல் ஏதும் இருக்காது.

வங்கதேச அணி துவக்க ஆட்டத்தில் வலிமையான தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்டது. இப்போட்டியில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்திய வங்கதேச அணி தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி சாதித்தது. துவக்க ஆட்டத்தில் தமீம் இக்பால் சொதப்பிய போதும் முஷ்பிகுர் ரஹிம், சாகிப் அல் ஹசன், மகமதுல்லா, சவுமியா சர்கார் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இதே போல் பந்து வீச்சில் முஷ்தாபிகுர் ரஹிம், முகமது சைபுதீன் இருவரும் விக்கெட் வீழ்த்தி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தனர். ‘சுழலில்’ சாகிப், மெகதி ஹசன் இருவரும் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு காரணாமக இருந்தனர். பீல்டிங்கிலும் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. தவிர, முதல் வெற்றி மனரீதியில் வீரர்களை வலிமையடையச் செய்தள்ளது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால் நியூசி.,க்கு கடும் நெருக்கடி தரலாம்,

இரண்டாவது வெற்றிக்கு இரு அணிகளும் போராடும் என்பதால் இப்போட்டியில் ‘அனல்’ பறக்கும் என எதிர்பார்க்கலாம்.


நேருக்கு நேர்: இவ்விரு அணிகளும் இதவரை 29 முறை மோதி உள்ளன. இதில், நியூசிலாந்து அணி அதிகபட்சமாக 24 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 5 ஆட்டத்தில் மட்டுமே வங்கதேசம் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.