இலங்கைக்கு முதல் வெற்றி

பதிவு செய்த நாள் : 04 ஜூன் 2019

கார்டிப்


உலக கோப்பை தொடரில் ஆப்கனுக்கு எதிரான போட்டியில் பவுலர்கள் அசத்த இலங்கை அணி ‘டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி 34 ரன்னில் வெற்றி பெற்றது. குசால் பெரேரா (78) அரைசதம் அடித்தார்.

உலகின் ‘டாப்-10’ அணிகள் மோதும் 12வது ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. கார்டிப் நகரில் இன்று நடந்த 7வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் இலங்கையை எதிர்த்து ஆப்கானிஸ்தான் மோதியது. இரு அணிகளும் துவக்க ஆட்டத்தில் பரிதாபமாக தோற்றன. ஆஸி.,க்கு எதிராக ஆப்கனும், நியூசிலாந்துக்கு எதிராக இலங்கையும் தோற்றன.

இந்த நிலையில், கார்டிபில் நடந்த போட்டி இரு அணிக்கும் முக்கியம் வாய்ந்ததாக அமைந்தது. அதாவது இரு அணிக்கும் வெற்றி முக்கியம் என இருந்தது.   இதையடுத்து பலத்த எதிர்பார்ப்பிற்கு இடையே போட்டி துவங்கியது. இதில், ‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் ‘பவுலிங்கை’ தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு கேப்டன் கருணாரத்னே, குசால் பெரேரா இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். குசால் பெரேரா அதிரடியில் இறங்க அவருக்கு கருணாரத்னே கம்பெனி கொடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 92 ரன் (13.1 ஓவர்) சேர்த்த நிலையில், முகமது நபி பந்தில் கருணாரத்னே (30) ஆட்டமிழந்தார். பின் பெரேராவுடன் திருமானே இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி வந்தனர்.

தொடர்ந்து அசத்திய முகமது நபி இம்முறை திருமானே (25) விக்கெட்டை வீழ்த்தினார். இவரைத் தொடர்ந்து மெண்டிஸ் (2), டிசில்வா (0), திசாரா பெரேரா (2), உதானா (10) ஆட்டமிழந்தனர். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த குசால் பெரேரா 78 ரன் (81 பந்து, 8 பவுண்டரி) எடுத்த நிலையில் ரஷித்கான் ‘சுழலில்’ சிக்கினார். ஒருகட்டத்தில் இலங்கை அணி 1 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து வலுவான நிலையில், இருந்தது. இதன் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாய் சரிய ஆட்டம் ஆப்கன் பக்கம் திரும்பியது. இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன் (33 ஓவர்) எடுத்த போது மழையால் ஆட்டம் தடைபட்டது. லக்மல் (2), மலிங்கா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

சுமார் இரண்டுமணி நேரம் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின் ஆட்டம் துவங்கிய போது போட்டி 41 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டது. இதையடுத்து இலங்கை தனது இன்னிங்சை தொடர்ந்தது. ஜட்ரான் பந்தில் மலிங்கா (4) ஆட்டமிழந்தார். கடைசியாக ரஷித்கான் நந்தில் பிரதீப் ‘டக்&அவுட்’ ஆக இலங்கை அணி 36.5 ஓவரில் 201 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. லக்மல் (15) அவுட்டாகாமல் இருந்தார். ஆப்கன் தரப்பில் முகமது நபி அதிகபட்சமாக 4 விக்கெட் சாய்த்தார். ஜட்ரான், ரஷித்கான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


இலங்கை அணி ‘ஆல்&அவுட்’ ஆனதால் ‘டக்வொர்த்-லீவிஸ்’ விதிப்படி ஆப்கன் 41 ஓவரில் 187 ரன் எடுத்தால் வெற்றி என நிர்ணயிக்கப்பட்டது.  ஆப்கன் அணிக்கு முகமது ஷஜாத், ஹஜ்ரதுல்லா ஜஜாய் இருவரும் அதிரடி துவக்கம் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 34 ரன் (3.4 ஓவர்) சேர்த்த நிலையில், மலிங்கா வேகத்தில் முகமது ஷஜாத் (7) சரிந்தார். அடுத்து வந்த ரஹ்மத் ஷா (2) உதானாவிடம் வீழ்ந்தார். ஹஸ்மதுலா ஷஹிதி (4) முகமது நபி (11) ஏமாற்றினர். கேப்டன் குல்பதின் நயிப் (23), ரஷித்கான் (2), தவலத் ஜத்ரான் (6) ஏமாற்றினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய ஆட்டம் இலங்கை வசம் சென்றது. ஆப்கன் அதிகபம் நம்பிய நஜிபுல்லா ஜத்ரான் (43) பரிதாபமாக ரன் அவுட் ஆனார்.

கடைசியாக மலிங்கா வேகத்தில் ஹமித் ஹசன் (6) ஸ்டெம்புகள் சிதற போலாடாக ஆப்கன் அணி 32.4 ஓவரில் 152 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. முஜீப் உர் ரஹ்மான் (1) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை தரப்பில் பிரதீப் 4, மலிங்கா 3 விக்கெட் சாய்த்தனர். ஆட்டநாயகனாக பிரதீப் தேர்வு செய்யப்பட்டார்.