இங்கிலாந்து வெற்றி தொடருமா...!’

பதிவு செய்த நாள் : 02 ஜூன் 2019

நாட்டிங்காம்


உலக கோப்பை தொடரில் இன்று நடக்க உள்ள ஆறாவது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை எதிர்த்து இங்கிலாந்து மோதுகிறது..

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திர«லியா, 2வது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலகின் ‘டாப்-10’ அணிகள் பங்கேற்கின்றன. முதலில் போட்டிகள் ‘ரவுண்ட்ராபின்’ லீக் முறையில் நடக்கிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோதும். இதன் பின் அதாவது லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

நாட்டிங்காமில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்க உள்ள ஆறாவது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை எதிர்த்து இங்கிலாந்து மோதுகிறது.  ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 6வது இடத்தில் உள்ளது.

சொந்த மண்ணில் விளையாடுவதால் கூடுதல் பலத்தோடு காணப்படும் இங்கிலாந்து அணி துவக்க ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை மிக எளிதாக வீழ்த்தியது. பேட்டங், பவுலிங் இரண்டிலும் சமபலத்தோடு காணப்படும் இங்கிலாந்து அணிக்கு முதல் ஆட்டத்தில் நான்கு வீரர்கள் (ஜேசன் ராய், ஜோ ரூட், மார்கன், ஸ்டோக்ஸ்) அரைசதம் அடித்து கைகொடுத்தனர். சூப்பர் பார்மில் உள்ள பேர்ஸ்டோவ், பட்லர் இருவரும் சொதப்பிய போதும் இங்கிலாந்து 311 ரன்கள் குவித்தது. பந்துவீச்சை பொறுத்தவரை ஜோப்ரா ஆர்ச்சர் வேகத்தில் மிரட்டினார். இவரது பந்துவீச்சில் ஆம்லா காயமடைந்தார். தவிர, மார்க்ராம், டுபிளசி, வான்டர் டுசன் ஆகியோர் விக்கெட்டை வீழ்த்தி சாதித்தார். வோக்ஸ், பிளங்கட், ஸ்டோக்ஸ் ஆகியோரும் அணிக்கு கைகொடுத்தனர். ‘சுழலில்’ அடில் ரஷித் சிறப்பாக செயல்பட்டார். பந்துவீச்சுக்கு ஆதரவாக அணியின் பீல்டிங் உள்ளது. முதல் வெற்றியால் இங்கிலாந்து வீரர்கள் மனரீதியில் வலிமையோடு உள்ளனர். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால் பாகிஸ்தானை வீழ்த்துவதில் எவ்வித பிரச்னையும் இருக்காது.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை துவக்க ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசிடம் படுதோல்வி அடைந்தது. இந்த அணி 105 ரன்னில் ஆட்டமிழந்தது. எந்த ஒரு பேட்ஸ்மேனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை, தவிர அணியின் தேர்வும் சிறப்பாக இல்லை. அனுபவ வீரர் சோயப் மாலிக்கிற்கு வாய்ப்பு தராமல் இருந்தது புரியாத புதிராக இருந்தது. தாமஸ், கேப்டன் ஹோல்டர் வேகத்தில் பாகிஸ்தான் விக்கெட்டுகள் சீடடுக்கட்டாய் சரிந்தது. 105 ரன்னை வைத்துக் கொண்டு வெஸ்ட்இண்டீசின் பலஙமேனை பேட்டிங்கை சைத்துப் பார்ப்பது முடியாத காரியம் என்ற போதும் வேகத்தில் முகமது ஆமிர் மிரட்டினார். இவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது தேர்வை நியாயப்படுத்தினார். தவறுகளை திருத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட்டால் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.


நேருக்கு நேர்: இரு அணிகளும் இதுவரை 87 முறை மோதி உள்ளன. இதில், 53 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது, 31 ஆட்டத்தில் மட்டுமே பாகிஸ்தான் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. 3 ஆட்டம் ரத்தாகி உள்ளது.