வங்கத்திடம் தென் ஆப்ரிக்கா ‘ஷாக்’

பதிவு செய்த நாள் : 02 ஜூன் 2019

லண்டன்


உலக கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்கா தனது இரண்டாவது தோல்வியை சந்தித்தது. இம்முறை வங்கதேசத்திடம் 21 ரன்னில் வீழ்ந்தது.


இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லண்டனில் இன்று நடந்த ஐந்தாவது லீக் போட்டியில் வங்கதேசம், தென் ஆப்ரிக்கா  அணிகள் மோதின. தென் ஆப்ரிக்க அணியில் பிரிட்டோரியஸ், ஆம்லாவுக்கு பதிலாக டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ் சேர்க்கப்பட்டனர். தென் ஆப்ரிக்க அணிக்கு  இந்த போட்டி முக்கியம் வாய்ந்ததாக மைந்தது. காரணம் இங்கிலாந்துக்கு எதிரான துவக்க போட்டியில் தென் ஆப்ரிக்கா படுதோல்வி அடைந்தது. அதே நேரம்  வங்கதேசத்திற்கு இது முதலாவது போட்டியாகும்.

பலத்த எதிர்பார்ப்பிற்கு இடையே போட்டி துவங்கியது. இதில், ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டுபிளசி, பீல்டிங் தேர்வு செய்தார்.

வங்கதேச அணிக்கு தமிம் இக்பால், சவுமியா சர்கார் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. லுங்கிடி வீசிய 5வது ஓவரில் 3 பவுண்டரி அடித்த சவுமியா சர்கார், லுங்கிடி, ரபாடா வீசிய 7, 8வது ஓவரில் தலா 2 பவுண்டரி விளாசினார். பெலுக்வாயோ பந்தில் தமிம் இக்பால் (16) அவுட்டானார். கிறிஸ் மோரிஸ் வேகத்தில் சவுமியா  சர்கார் (42) வெளியேறினார்.

பின் இணைந்த சாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் ஜோடி தென் ஆப்ரிக்க பந்துவீச்சை எளிதாக சமாளித்து ரன் சேர்த்தது. மோரிஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பிய  சாகிப், மோரிஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அரைசதமடித்தார். டுமினி வீசிய 25வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த முஷ்பிகுர், பெலுக்வாயோ பந்தை பவுண்டரி க்கு அனுப்பி தன்பங்கிற்கு அரைசதத்தை பதிவு செய்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தென் ஆப்ரிக்க பவுலர்கள் திணறினர். இந்நிலையில், 36வது ஓவரை  வீசிய இம்ரான் தாகிர் திருப்பம் தந்தார். இந்த ஓவரின் முதல் பந்தில் சாகிப் (75) போல்டானார். மார்க்ராம் வீசிய 38வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு  பவுண்டரி விளாசிய முகமது மிதுன் (21), தாகிர் பந்தில் போல்டானார். பெலுக்வாயோ வேகத்தில் முஷ்பிகுர் (78) பெவிலியன் திரும்பினார்.

பெலுக்வாயோ, மோரிஸ் வீசிய 45, 47வது ஓவரில் தலா 2 பவுண்டரி அடித்த மொசாதக் ஹொசைன் (26) ஆறுதல் தந்தார். மோரிஸ் வீசிய 49வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசிய மகமதுல்லா, ரபாடா பந்தை சிக்சருக்கு அனுப்பினார். வங்கதேச அணி 50 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 330 ரன்கள் குவித்தது.  மகமதுல்லா (46), மெஹிதி ஹசன் (5) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் பெலுக்வாயோ, மோரிஸ், தாகிர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்.

கடின இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக், மார்க்ராம் இருவரும் சுமாரான துவக்கம் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 49 ரன்  (9.4 ஓவர்) சேர்த்த நிலையில், குயிவ்டன் டி காக் (23) பரிதாபமாக ரன் அவுட் ஆனார். பின் மார்க்ராமுடன் கேப்டன் டுபிளசி இணைந்தார். இருவரும் பெ £றுப்புடன் விளையாடி ரன் எடுத்து வந்தனர். 19வது ஓவரின் முடிவில் தென் ஆப்ரிக்கா 100 ரன் எடுத்தது. அரைசதம் அடிப்பார் எவன எதிர்பார்த்த நிலையில்,கிப் அல் ஹசன் பந்தில் மார்க்ராம் (45) போல்டானார். அதே நேரம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டுபிளசி 45 பந்தில் அரைசதம் அடித்தார். இவர் 62  ரன் (53 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்த நிலையில், மெகதி ஹசன் பந்தில் போல்டாக தென் ஆப்ரிக்க ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அடுத்து வந்த மில்லர் (38), வான்டர் டுசன் (41) ஓரளவு கைகொடுத்தனர். பெலுவ்வாயோ (8), மோரிஸ் (10) சொதப்பினார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள்  சரிய ஆட்டம் வங்கதேசம் வசம் சென்றது. ஒருமுனையில் டுமினி மட்டும் போராடினார். 4 ஓவரில் 55 ரன் தேவைப்பட்டது. இந்த நேரத்தில் டுமிவி (45) வெளியேற  வங்கதேசம் வெற்றி உறுதியானது. முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்தது. ரபாடா (13), இம்ரான் தாகிர் (10)  அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் தரப்பில் முஸ்தாபிஜூர் ரஃம் 3, முகமது சைபுதீன் 2 விக்கெட் சாய்த்தனர். ஆட்டநாயகனாக சாகிப் அல் ஹசன் தேர்வு  செய்யப்பட்டார்.100 போட்டி


வங்கதேசத்துக்கு எதிராக களமிறங்கிய தென் ஆப்ரிக்காவின் இம்ரான் தாகிர், தனது 100வது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடினார். இதன்மூலம் இந்த இலக்கை எட்டிய 2வது தென் ஆப்ரிக்க ஸ்பெஷலிஸ்ட்; சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமை பெற்றார். ஏற்கனவே நிக்கி போயே, 113 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.


142 ரன்கள்


பொறுப்பாக ஆடிய சாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் ஜோடி, 3வது விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் எந்த ஒரு  விக்கெட்டுக்கும் அதிக ரன் சேர்த்த வங்கதேச ஜோடியானது. இதற்கு முன், 2015ல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வங்கதேசத்தின் மகமதுல்லா, முஷ்பிகுர்  ரஹிம் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 141 ரன் சேர்த்திருந்தது அதிகபட்ச ரன்னாக இருந்தது.


330 ரன்கள்


தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 330 ரன்கள் குவித்த வங்கதேச அணி, சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு  முன், 2015ல் தாகாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 329 ரன்கள் எடுத்திருந்தது வங்கதேசத்தின் அதிகபட்ச ரன்னாக இருந்தது. கடந்த 2015ல்ஸ்காட்லாந்துக்கு எதிராக 322 ரன்கள் எடுத்திருந்தது, உலக கோப்பை வரலாற்றில் வங்கதேசத்தின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.


250வது விக்கெட்


தென் ஆப்ரிக்க வீரர் மார்க் ராம் விக்கெட்டை வங்கதேச வீரர் சாகிப் அல் ஹசன் வீழ்த்தினார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் சாகிப்பின் 250வது விக்கெட்டாகும்.