எழுச்சி பெறுமா தென் ஆப்ரிக்கா

பதிவு செய்த நாள் : 02 ஜூன் 2019

லண்டன்


உலக கோப்பை தொடரில் இன்று நடக்க உள்ள ஐந்தாவது லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவை எதிர்த்து வங்கதேசம் மோதுகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில்,  நடப்பு சாம்பியன் ஆஸ்திர«லியா, 2வது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, தென் ஆப்ரிக்கா,  வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலகின் ‘டாப்-10’ அணிகள் பங்கேற்கின்றன. முதலில் போட்டிகள் ‘ரவுண்ட்ராபின்’ லீக் முறையில் நடக்கிறது. இதில்,  ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோதும். இதன் பின் அதாவது லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும்  அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

லண்டனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்க உள்ள ஐந்தாவது லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவை எதிர்த்து வங்கதேசம் மோதுகிறது. தரவரிசையில் தென் ஆப்ரிக்கா 3, வங்கதேசம் 7வது இடத்தில் உள்ளன. தென் ஆப்ரிக்காவை பொறுத்தவரை இந்த அணி துவக்க ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது.  இப்போட்டியில் தென் ஆப்ரிக்கா அதிர்ச்சி தோல்வியுற்றது. முதல் போட்டியில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சொதப்பியது. ரபாடா, நிகிடி இருவரும் முதல் போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை. இருவரும் தலா 60 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தனர். சுழலில் இம்ரான் தாகிர் மட்டும் சிறப்பாக செயல்பட்டார்.  பேட்டிங்கில் குயின்டன் டி காக், வான்டர் டுசன் இருவர் மட்டும் அரைசதம் அடித்தனர். மற்றவர்கள் சொதப்பினர். தவிர பீல்டிங்கும் சிறப்பாக இல்லை.

முதல் போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் ஆம்லா காயம் அடைந்தார். இவர் இன்றைய போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருந்தும்  போட்டி துவங்குவதற்கு முன்தான் ஆம்லா விளையாடுவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என தென் ஆப்ரிக்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்றைய போட்டி  குறித்து கேப்டன் டுபிளசி கூறுகையில், இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி வருத்தமளித்தாலும் பல தவறுகளை செய்தோம். இதை திருத்திக் கொண்டு இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுஙவாம் என்றார். தென் ஆப்ரிக்க அணி இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை.

உலக கோப்பை தொடரில் 6வது முறையாக (1999, 2003, 2007, 2011, 2015, 2019) விளையாட உள்ள வங்கதேச அணி, கடந்த 2015ல் அதிகபட்சமாக கால்இறுதி வரை  சென்றது சிறந்த செயல்பாடாக உள்ளது. இம்முறை சிறப்பாக செயல்படும்பட்சத்தில் முதல் முறையாக கோப்பையை வென்று சாதிக்கலாம்.

பேட்டிங்கில் தமீம் இக்பால், சாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம், மகமதுல்லா, சவுமியா சர்கார், சபிர் ரஹ்மான் உள்ளிட்டோர் ரன்மழை பொழியலாம். வேகப்ப ந்துவீச்சில் கேப்டன் செசார்டசா, முஸ்தபிஜூர் ரஹ்மான், ருபெல் ஹொசைன் ஆகியோர் மிரட்ட காத்திருக்கின்றனர். சுழலில் சாகிப், மெஹதி ஹசன் சாதிக்க அதிக  வாய்ப்புள்ளது. பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சமபலத்துடன் காணப்படும் வங்கதேச அணி வலிமையான தென் ஆப்ரிக்காவுக்கு கடும் நெருக்கடி தரலாம் என்ற  எதிர்பார்ப்பு காணப்படுகிறது.


நேருக்கு நேர்: இவ்விரு அணிகளும் இதுவரை 21முறை மோதி உள்ளன. இதில், தென் ஆப்ரிக்கா அதிகபட்சமாக 17 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. 3 ஆட்டத்தில்  மட்டுமே வங்கதேசம் தனது வெற்றியை பதிவு செய்தள்ளது. ஒரு போட்டி ரத்தாகி உள்ளது.