ஆப்கனை அமுக்கிய ஆஸி.,

பதிவு செய்த நாள் : 02 ஜூன் 2019

பிரிஸ்டல்


உலக சாம்பியன் ஆஸ்திரேலியா வெற்றியுடன் கணக்கை துவக்கியது. பிஸ்டலில் நேற்று நடந்த லீக் போட்டியில் ‘கத்துக்குட்டி’ ஆப்கனை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. வார்னர் (89*), ஆரோன் பின்ச் (66) அரைசதம் அடித்தனர்.


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. பிரிஸ்டலில் நேற்று நடந்த இரண்டாவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஆப்கானிஸ்தான் மோதியது. இதில். ‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்தது.

ஆப்கனுக்கு ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது. முகமது ஷெசாத் ‘டக்&அவுட்’ ஆனார். இதே போல் கம்மின்ஸ் வேகத்தில் ஹஸ்ரத்துல்லா (0)  சரிந்தார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் சரிய, ரஹ்மத் ஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். அதே நேரம் ஹஸ்மதுல்லா ஷாகிடி (18), முகமது நபி (7) சொதப்பினர். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், ரஹ்மத் ஷா (43) ஜாம்பா ‘சுழலில்’ சிக்கினார். ஒருகட்டத்தில் ஆப்கன் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்து திணறியது.

இந்த நிலையில், கேப்டன் குல்தீப் நைப் (38), நஜிபுல்லா ஜாட்ரன் (52) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சரிவிலிருந்து அணியை மீட்டனர். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்தது. கடைசி கட்டத்தில் ரஷித்கான் 11 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 27 ரன்கள் எடுத்தார். கம்மின்ஸ் பந்தில் தவ்லரத்    ஜாட்ரன் (4), முஜீப் உர் ரஹ்மான் (13) வெளியேற ஆப்கன் அணி 38.2 ஓவரில் 207 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ஹமீத் ஹசன் (1) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸி., தரப்பில் கம்மின்ஸ், ஜாம்பா தலா 3, ஸ்டாய்னிஸ் 2 விக்கெட் சாய்த்தனர்.


எட்டக்கூடிய இலக்கை துரத்திய ஆஸி., அணிக்கு கேப்டன் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். இருவரும் எதிரணி பந்து வீச்சை அடித்து நொறுக்கினர். இதையடுத்து ஸ்கோர் ‘ராக்கெட்’ வேகத்தில் பறந்தது. அதிரடியாக விளையாடிய ஆரோன் பின்ச் 40 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன் (16.2 ஓவர்) சேர்த்த நிலையில் குல்பதீன் நைப் பந்தில் ஆரோன் பின்ச் ஆட்டமிழந்தார். இவர் 66 ரன் (49 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். அடுத்து கவாஜா களம் வந்தார். ஆஸி., 17.3 ஓவரில் 100 ரன் கடந்தது. பொறுப்புடன் விளையாடி வந்த வார்னர் 74 பந்தில் அரைசதம் அடித்தார்.

முக்கிய கட்டத்தில் ரஷித்கான் திருப்புமுனை தந்தார். இவரது ‘சுழலில்’ கவாஜா (16) சிக்கினார். பின் வார்னருடன் ஸடீவ் ஸ்மித் இணைந்தார். இருவரும் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் எடுத்து வந்தனர். வெற்றிக்கு 3 ரன் தேவை என்ற நிலையில், முஜீப் உர் ரஹ்மான் பந்தில் ஸ்டீவ் ஸ்மித் (18) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் பவுண்டரி விளாச ஆஸி., 34.5 ஓவரில் 209 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வார்னர் 89 (114 பந்து, 8 பவுண்டரி), மேக்ஸ்வெல் (4) அவுட்டாகாமல் இருந்தனர். ஆப்கன் தரப்பில் ரஷித்கான், முஜீப் உர் ரஹ்மான், குல்பதீன் நைப் தலா 1 விக்கெட் சாய்த்தனர். ஆட்டநாயகனாக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.