நியூசி.,யிடம் வீழ்ந்தது இலங்கை

பதிவு செய்த நாள் : 01 ஜூன் 2019

கார்டிப்


உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கப்டில் (73*), மன்ரோ (58*) அரைசதம் அடித்து கைகொடுக்க 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. கார்டிப் நகரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடந்த மூன்றாவது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் இலங்கையை எதிர்த்து நியூசிலாந்து மோதியது. இதில், ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் ‘பவுலிங்கை’ தேர்வு செய்தார்.

இலங்கை அணிக்கு திருமானே, கேப்டன் கருணாரத்னே இருவரும் துவக்கம் தந்தனர். ஹென்ரி வேகத்தில் திருமானே (4) சரிந்தார். பின் கருணாரத்னேவுடன் குசால் பெரேரா இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி வந்தனர். ஆட்டத்தின் 9வது ஓவரை ஹென்ரி வீசினார். இந்த ஓவரின் முதலிரண்டு பந்தில் முறையே குசால் பெரேரா (29), மெண்டிஸ் (0) ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஹென்ரிக்கிற்கு ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு கிடைத்தது. பரபரப்பான 3வது பந்தை எதிர்கொண்ட தனஞ்சயா டிசில்வா பவுண்டரி அடித்து ‘ஹாட்ரிக்’ வாய்ப்பை நிராகிரித்தார். இருந்தும் 4 ரன்னே எடுத்த நிலையில், பெர்குசன் பந்தில் தனஞ்சயா டிசில்வா வெளியேறினார். அனுபவ வீரர் மாத்யூஸ் (0), ஜீவன் மெண்டிஸ் (1) சொதப்பினர். இலங்கை அணி 60 ரன்னில் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இந்த நிலையில், கருணாரத்னேவுடன் திசாரா பெரேரா இணைந்தார். ஒருமுனையில் கருணாரத்தேன பொறுப்புடன் விளையாட பெரேரா அதிரடியில் இறங்கினார். இவர் கிராண்ட்ஹோம், நீஷம் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்து அசத்தினார். இவர் 27 ரன் (23 பந்து, 2 சிக்சர்) எடுத்த நிலையில், சான்ட்னர் ‘சுழலில்’ சிக்கினார். பொறுப்புடன் விளையாடிய கருணாரத்னே 81 பந்தில் அரைசதம் அடித்தார். அதே நேரம் உதானா (0), லக்மல் (7), மலிங்கா (1) வெளியேற இலங்கை அணி 29.2 ஓவரில் 136 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. கருணாரத்னே 52 ரன் (84 பந்து, 4 பவுண்டரி) எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் ஹென்ரி, பெர்குசன் தலா 3 விக்கெட் சாய்த்தனர். பவுலட், சான்ட்னர், நீஷம், கிராண்ட்ஹோம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

எளிதான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு கப்டில், மன்ரோ இருவரும் அதிரடி துவக்கம் தந்தனர். இருவரும் எதிரணி பந்து வீச்சை விளாச ஸ்கோர் ‘ராக்கெட் வேகத்தில் பறந்தது. இதையடுத்து 13வது ஓவரின் முடிவில் நியூசிலாந்து அணி 100 ரன் எடுத்தது. அதிரடியாக விளையாடி கப்டில் 39 பந்தில் அரைசதம் அடித்தார். இவரைத் தொடர்ந்து மன்ரோ அரைசதம் கடந்தார். இவர் 41 பந்தில் அரைசதம் அடித்தார். இருவரும் தொடர்ந்து அசத்த நியூசிலாந்து அணி 16.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 137 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. கப்டில் 73 (51 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), மன்ரோ 58 (47 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். பவுலிங்கில் கலக்கிய ஹென்ரி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.