கோவை-மதுரை போட்டி ரத்து

பதிவு செய்த நாள் : 11 ஆகஸ்ட் 2017

திண்டுக்கல்

டி.என்.பி.எல்., ‘டுவென்டி-20’ தொடரில் மதுரை, கோவை இடையேயான ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது.

இந்தியா சிமென்ட்ஸ் ஆதரவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் இரண்டாவது ஆண்டு தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ ‘டுவென்டி-20’ (டி.என்.பி.எல்.,) தொடர் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த மெகா தொடரில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், 2-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கின்றன. முதலில் போட்டிகள் லீக் முறையில் நடக்கிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோதும். இதன் பின் அதாவது லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இத்தொடரின் 23வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் உள்ள என்.பி.ஆர்., கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற இருந்தது. இதில், கோவை, மதுரை அணிகள் மோத இருந்தன. திண்டுக்கல்லில் இன்று மாலையில் இருந்தே மழை பெய்ய தொடங்கியது. இதனால், ஆட்டம் துவங்க தாமதமானது. ஆடுகளம் தார்பாய் கொண்டு மூடப்பட்டிருந்தது. இருந்தும் ஆடுகளத்தை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால், போட்டி நடத்துவதில் சிக்கல்  ஏற்பட்டது. இரண்டு மணிநேர மழைக்குப் பின் ஆடுகளத்தை பார்வையிட்ட நடுவர்கள் போட்டியை ரத்து செய்யவதாக அறிவித்தனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி அடைந்த மதுரை அணிக்கு ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், முதல் புள்ளி கிடைத்தது. கோவை அணி 4 புள்ளிகளுடன் தொடர்ந்து 6வது இடத்தில் நீடிக்கிறது.