திருவள்ளூர் அசத்தல் வெற்றி

பதிவு செய்த நாள் : 09 ஆகஸ்ட் 2017

திருநெல்வேலி

மதுரை அணிக்கு எதிரான டி.என்.பி.எல்., ‘டுவென்டி-20’ தொடரில் கேப்டன் அபராஜித் 35 பந்தில் 72 ரன் விளாச திருவள்ளூர் 3 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.

இந்தியா சிமென்ட்ஸ் ஆதரவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் இரண்டாவது ஆண்டு தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ ‘டுவென்டி-20’ (டி.என்.பி.எல்.,) தொடர் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த மெகா தொடரில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், 2-வது  இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை,  மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கின்றன. முதலில் போட்டிகள் லீக் முறையில் நடக்கிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற  அணியுடன் ஒருமுறை மோதும். இதன் பின் அதாவது லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இத்தொடரின் 21வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமென்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில், திருவள்ளூர், மதுரை  அணிகள் மோதின. மழையால் ஆட்டம் ஒருமணி நேரம் தாமதமாக துவங்கியது. இதனால் போட்டி 14 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டது. ‘டாஸ்’ வென்ற  மதுரை கேப்டன் அருண் கார்த்திக் முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்தார். மதுரை அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. சிலம்பரசன் பந்தில் சந்திரன் (2) ஆட்டமிழந்தார். பின் கேப்டன் அருண் கார்த்திக்குடன் விக்கெட்கீப்பர் மணி பாரதி இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாடியதோடு அரைசதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 112 ரன் சேர்த்த நிலையில், மணி பாரதி ஆட்டமிழந்தார். இவர் 67 ரன் (36 பந்து, 6  பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். தொடர்ந்து அசத்திய சிலம்பரசன் ஷாருக்கான் (0) விக்கெட்டை வீழ்த்தினார். மதுரை அணி 14 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்தது. அருண் கார்த்திக் 68 (38 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), கணேஷ் (1) ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். திருவள்ளூர்  தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

கடின இலக்கை துரத்திய திருவள்ளூர் அணிக்கு சதுர்வேத் (1), சிதாரத் (4) சொதப்பினர். பின் கேப்டன் அபராஜித்துடன் ஹரி நிஷாந்த் இணைந்தார்.  அதிரடியாக விளையாடிய அபராஜித் அரைசதம் அடித்து அசத்தினார். இவருக்கு ஹரி நிஷாந்த் கம்பெனி கொடுத்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு  104 ரன் சேர்த்த நிலையில், கார்த்திகேயன் பந்தில் அபராஜித் ஆட்டமிழந்தார். இவர் 72 ரன் (35 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். இவரைத் தொடர் ந்து ஹரி நிஷாந்த் (37) வெளியேற ஆட்டம் பரபரப்பானது. முக்கிய கட்டத்தில் ரங்கராஜன் (2), சஞ்சய் யாதவ் (11), லட்சுமி நாராயணன் (2) ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 10 ரன் தேவைப்பட்டது. கடைசி ஓவரை சந்திரசேகர் வீசினார். முதல் பந்தில் தண்வார் ஓரு ரன் எடுத்தார். அடுத்த இரண்டு பந்தில் கெவின், ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாச திருவள்ளூர் அணி 13.3 ஓவரில் 7 விக்கெட் இழபுக்கு 147 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கெவின் (11), தண்வார் (2) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மதுரை தரப்பில் கார்த்திகேயன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் அசத்திய அபராஜித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

திருவள்ளூர் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வி என 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. தான் விளையாடிய ஐந்து ஆட்டத்திலும் பரிதாபமாக தோற்ற மதுரை அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது