திருச்சி ‘திரில்’ வெற்றி

பதிவு செய்த நாள் : 03 ஆகஸ்ட் 2017

திண்டுக்கல்

மதுரை அணிக்கு எதிரான லீக் போட்டியில் 2 ரன்னில் திருச்சி ‘திரில்’ வெற்றி பெற்றது.

திண்டுக்கல் என்.பி.ஆர்., கல்லூரி மைதானத்தில் இன்று இரவு நடந்த 14வது லீக் போட்டியில் மதுரை, திருச்சி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற மதுரை முதலில் ‘பவுலிங்கை’ தேர்வு செய்தது. திருச்சி அணிக்கு பரத் சங்கர், கேப்டன் இந்திரஜித் இருவரும் அதிரடி துவக்கம் தந்தனர், அதிரடியாக விளையாடிய இந்திரஜித் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 116 ரன் (12.4 ஓவர்) சேர்த்த நிலையில், இந்திரஜித் ஆட்டமிழந்தார். இவர் 70 ரன் (37 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். அடுத்து வந்த நிலேஷ் சுப்ரமணியம் 15 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 35 ரன் எடுத்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பரத் சங்கர் அரைசதம் அடித்தார். இவர் 53 ரன் (47 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்த நிலையில், ராஜா பந்தில் போல்டானார். அகில் ஸ்ரீநாத் (11) ஆட்டமிழந்தார். முடிவில் திருச்சி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 187 ரன் குவித்தது. கவுசிக் (13), ஆதித்ய கிரிதர் (1) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மதுரை தரப்பில் ராஜா 2, விக்னேஷ், கார்த்திகேயன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை துரத்திய மதுரை அணிக்கு அருண் கார்த்திக் அதிரடி காட்டினார். 5வது ஓவரில் மதுரை 50 ரன் கடந்தது. ‘ருத்ரதாண்டவம்’ ஆடிய கார்த்திக் அரைசதம் அடித்தார். பந்து நாலா புறமும் பறக்க ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 89 ரன் (8.3 ஓவர்) சேர்த்த நிலையில், சந்திரன் (23) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷாருக்கான் (2), குமார் (18), கார்த்திகேயன் (5), பிரசாந்த் பிரபு (2) ஏமாற்றினர். தொடர்ந்து விளாசிய அருண் கார்த்திக் அரைசதம் அடித்தார். இவருக்கு விக்னேஷ் கம்பெனி கொடுத்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அருண் கார்த்திக் 79 ரன் (34 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து அகில் ஸ்ரீநாத் பந்தில் ஆட்டமிழந்தார். முக்கிய கட்டத்தில் கணேஷ் (8) வெளியேற ஆட்டம் பரபரப்பானது. ராஜா (2) வெளியேற கடைசி ஓவரில் 3 ரன் தேவைப்பட்டது.

ஆட்டத்தின் கடைசி ஓவரை கவுசிக் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பொய்யா மொழி (1) நடையை கட்டினார். 2வது பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. 3வது பந்தில் கடைசியாக வந்த சந்திரசேகர் (0) ரன் அவுட் ஆக திருச்சி 2 ரன்னில் ‘திரில்’ வெற்றி பெற்றது. மதுரை அணி 19.3 ஓவரில் 185 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. விக்னேஷ் (38) ஆட்டமிழக்காமல் இருந்தார். திருச்சி தரப்பில் அகில் ஸ்ரீநாத் 4, கவுசிக் 3, விக்னேஷ், அஜித்கமார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். திருச்சி கேப்டன் இந்திரஜித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.