கோவையை வீழ்த்தியது சேப்பாக்கம்

பதிவு செய்த நாள் : 30 ஜூலை 2017

சென்னை

டி.என்.பி.எல்., ‘டுவென்டி-20’ தொடரில் சேப்பாக்கம் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இந்த முறை கோவையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சற்குணம் அரைசதம் அடித்தார்.

இந்தியா சிமென்ட்ஸ் ஆதரவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் இரண்டாவது ஆண்டு தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ ‘டுவென்டி-20’ (டி.என்.பி.எல்.,) தொடர் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த மெகா தொடரில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், 2-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கின்றன. முதலில் போட்டிகள் லீக் முறையில் நடக்கிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோதும். இதன் பின் அதாவது லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இத்தொடரின் எட்டாவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.,சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில், சேப்பாக்கம் அணியை எதிர்த்து கோவை மோதியது. முதலில் கோவை பேட் செய்தது. சதீஷ் வேகத்தில் அனிருத் சீதாராம் (6) சரிந்து அதிர்ச்சி கொடுத்தார். இருந்தும் மற்றொரு தொடக்க வீரர் சூர்யபிரகாஷ் அதிரடியில் இறங்கி அசத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் அரைசதத்தை பதிவு செய்வார் என எதிர்பார்த்த நிலையில், 46 ரன் (43 பந்து, 5 பவுண்டரி) பரிதாபமாக ரன் அவுட் ஆனார். ரஞ்சன் பால் (18), கேப்டன் சையது முகமது (18) ஓரளவு கைகொடுத்தனர். முக்கிய கட்டத்தில் ஹரீஷ் குமார் ‘டக்-அவுட்’ ஆனார். இருந்தும் கடைசி கட்டத்தில் விக்கெட்கீப்பர் ரோகித் (18), முகமது (26) அசத்தினர். ஆட்டத்தின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் தீபன் லிக்னேஷ் (4) ரன் அவுட் ஆக கோவை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்தது. சிவகுமார் (5) ஆட்டமிழக்காமல் இருந்தார். சேப்பாக்கம் தரப்பில் ஜோசப் அதிகபட்சமாக 2 விக்கெட் வீழ்த்தினார்.

எளிதான இலக்கை துரத்திய சேப்பாக்கம் அணிக்கு கோபிநாத், தலைவன் சற்குணம் இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 66 ரன் (8.2 ஓவர்) சேர்த்த நிலையில், சையது முகமது பந்தில் கோபிநாத் ஆட்டமிழந்தார். இவர் 37 ரன் (25 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். இதே ஓவரில் அடுத்து வந்த சாய் கிஷோர் ‘டக்&அவுட்’ ஆக ஆட்டம் பரபரப்பானது. இதையடுத்து சற்குணத்துடன் சசிதேவ் இணைந்தார். 14வது ஓவரில் சேப்பாக்கம் 100 ரன் கடந்தது. முக்கிய கட்டத்தில் சசிதேவ் (31), கேப்டன் சதீஷ் (7) ஆட்டமிழந்தனர். யார் போனால் என்ன நான் இருக்கிறேன் என்ற தோணியில் விளையாடிய சற்குணம் அரைசதம் அடித்ததோடு அணியின் வெற்றியை உறுதி செய்தார். முடிவில் சேப்பாக்கம் அணி 19 ஓவரில் 4  விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சற்குணம் 52 (51 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), சரவணன் 15 (9 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கோவை தரப்பில் சையது முகமது 2, விக்னேஷ், ஹரீஷ் குமார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பேட்டிங்கில் அசத்திய சற்குணம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சேப்பாக்கம் அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் (திருவள்ளூர், கோவை) வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் உள்ளது. கோவை அணி ஒரு வெற்றி (மதுரை), ஒரு தோல்வி (சேப்பாக்கம்) என மொத்தம் 2 புள்ளிகள் பெற்றுள்ளது.