மதுரை மீண்டும் தோல்வி

பதிவு செய்த நாள் : 28 ஜூலை 2017

திருநெல்வேலி

மதுரை அணிக்கு எதிரான டி.என்.பி.எல்., ‘டுவென்டி-20’ லீக் தொடரில் விஷால் வைத்யா (65), அணிருத்தா ஸ்ரீகாந்த் (40) கைகொடுக்க காரைக்குடி அணி 43 ரன்னில் வெற்றி பெற்றது.

இந்தியா சிமெண்ட்ஸ் ஆதரவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் இரண்டாவது ஆண்டு தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ ‘டுவென்டி-20’ (டி.என்.பி.எல்.,) தொடர் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த மெகா தொடரில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், 2-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கின்றன. முதலில் போட்டிகள் லீக் முறையில் நடக்கிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோதும். இதன் பின் அதாவது லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இத்தொடரின் ஆறாவது லீக் ஆட்டம் நெல்லையில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில், மதுரையை எதிர்த்து காரைக்குடி அணி மோதியது. ‘டாஸ்’ வென்ற காரைக்குடி கேப்டன் பத்ரிநாத் முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்தார். காரைக்குடி அணிக்கு அணிருத்தா ஸ்ரீகாந்த், விஷால் வைத்யா இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 104 ரன் (12.4 ஓவர்) சேர்த்த நிலையில், கார்த்திகேயன் பந்தில் அணிருத்தா (40) ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விஷால் வைத்யா அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். அடுத்து வந்த கேப்டன் பத்ரிநாத் (12) பரிதாபமாக ரன் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து விஷால் வைத்யா 65 ரன் (51 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். சீனிவாசன் (2), ராஜ்குமார் (15) ஏமாற்றினார். கடைசி கட்டத்தில் ஷாஜகான் 13 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட ஆட்டமிழக்காமல் 32 ரன் விளாச காரைக்குடி அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன் குவித்தது. மதுரை தரப்பில் சந்திரசேகர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

கடின இலக்கை துரத்திய மதுரை அணிக்கு அருண் கார்த்திக் (19) ஏமாற்றினார். அடுத்து வந்த கார்த்திகேயன் (10) நீடிக்கவில்லை. இந்த நிலையில், சந்திரனுடன் ஷாருக்கான் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் எடுத்து வந்தனர். இருந்தும் சந்திரன் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். மதுரை அணி 13வது ஓவரில் 100 ரன் எடுத்தது. முக்கிய கட்டத்தில் ஷாருக்கான் (39) வெளியேற ஆட்டம் காரைக்குடி வசம் சென்றது. குமார் (11), விக்னேஷ் (3), பிரசாந்த் பிரபு (13), செந்தில்நாதன் (8) ஏமாற்றினர். ஆட்டத்தின் கடைசி பந்தில் எட்வர்ட் கென்னடி (0) ஆட்டமிழக்க மதுரை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்து பரிதாபமாக தோற்றது. பொய்யா மொழி (2) ஆட்டமிழக்காமல் இருந்தார். காரைக்குடி தரப்பில் மோகன் பிரசாந்த் 3, கணபதி, ராஜ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பேட்டிங்கில் அசத்திய விஷால் வைத்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

காரைக்குடி அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டியில் ஒரு வெற்றி (மதுரை), ஒரு தோல்வி (கோவை) என மொத்தம் 2 புள்ளிகள் பெற்றுள்ளது. மதுரை அணி தான் விளையாடிய இரண்டு (திண்டுக்கல், காரைக்குடி) போட்டிகளிலும் பரிதாபமாக தோற்றது.