பைனலில் இங்கிலாந்து...! * ஆஸி.,யும் வெளியேறி அதிர்ச்சி

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2019

பர்மிங்காம்


உலக கோப்பை பைனலுக்கு இங்கிலாந்து தகுதி பெற்றது. பர்மிங்காமில் நேற்று நடந்த இரண்டாவது அரைஇறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு  சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தியது. ஜேசன் ராய் 65 பந்தில் 85 ரன் விளாசினார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில்,  நடப்பு சாம்பியன் ஆஸ்திர«லியா, 2வது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, தென் ஆப்ரிக்கா,  வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலகின் ‘டாப்&10’ அணிகள் பங்கேற்றன. முதலில் போட்டிகள் ‘ரவுண்ட்ராபின்’ லீக் முறையில் நடந்தது. இதில், ஒவ்வொரு  அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோதின. இதன் பின் அதாவது லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடத்தைப் பிடித்த இந்தியா  (15 புள்ளி), ஆஸ்திரேலியா (14 புள்ளி), இங்கிலாந்து (12 புள்ளி), நியூசிலாந்து (11) அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. மற்ற அணிகள் முதல் சுற்றுடன் வெளியேறின.

மான்செஸ்டரில் நடந்த முதலாவது அரைஇறுதிப் போட்டியில் இந்தியாவை 18 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறி அசத்தியது. இந்த நிலையில், பர்மிங்காமில் இன்று நடந்த இரண்டாவது அரைஇறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன்  ஆஸ்திரேலியாவை எதிர்த்து உள்ளூர் அணியான இங்கிலாந்து மோதியது. தரவரிசையில் இங்கிலாந்து 2, ஆஸி., 4வது இடத்தில் உள்ளன.

பலத்த எதிர்பார்ப்பிற்கு இடையே ஆட்டம் துவங்கியது. இதில், ‘டாஸ்’ வென்ற ஆஸி., கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸி., அணியில் கவாஜா இடத்தில் ஹேண்டஸ்கோம்ப் தேர்வானார். இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் இல்லை.

ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆர்ச்சர் 'வேகத்தில்' கேப்டன் பின்ச் ‘டக்&அவுட்’ ஆனார். 2 பவுண்டரிகள் உட்பட 9 ரன் மட்டுமே எடுத்து வோக்ஸ் வேகத்தில் வார்னர் சரிந்தார், ஹேண்ட்ஸ்கோம்ப் (4) ஒற்றை இலக்கில் திரும்பினார். பின், இணைந்த ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி ஜோடி பொறுப்புடன் விளையாட, அணி சரிவிலிருந்து மீண்டது. இநந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்த நிலையில், ரஷித் சுழலில் அலெக்ஸ் கேரி சிக்கினார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், இவர் 46 ரன் (70 பந்து, 4 பவுண்டரி) எடுத்தார். அதே ஓவரில் ஸ்டாய்னிஸ் (0) வெளியேற ஆட்டம்  பரபரப்பானது.

இருந்தும் ஒருமுனையில் போராடிய ஸ்டீவ் ஸ்மித், 72 பந்தில் அரைசதம் அடித்தார். சற்றே அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 22 ரன் எடுத்தார். கம்மின்ஸ் (6) சொதப்பினார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்த போதும் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து அணிக்கு கைகொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால்,  இவரும் ஏமாற்றினார். ஸ்மித் 85 ரன் (119 பந்து, 6 பவுண்டரி) எடுத்து பரிதாபமாக ரன் அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் ஸ்டார்க் (29) கைகொடுத்தார். மார்க் உட் பந்தில் பெஹ்ரன்டர்ப் (1) வெளியேற ஆஸ்திரேலியா 49 ஓவரில் 223 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. நாதன் லியான் (5) அவுட்டாகாமல் இருந்தார்.    இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ், ரஷித் தலா 3, ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட் சாய்த்தனர்.

எளிதான இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். இருவரும் எதிரணி பந்துவீச்சை விளாசினார். ஸ்டார்க் பந்தில் ஜேசன் ராய் இமாலய சிக்சர் அடித்தார். எதிரணி பந்து வீச்சை நாலா புறமும் பறக்கவிட்ட ஜேசன் ராய் 50 பந்தில் அரைசதம் அடித்தார், 15.3  ஓவரில் இங்கிலாந்து 100 ரன் எடுத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 124 ரன் (17.2 ஓவர்) சேர்த்த நிலையில், ஸ்டார்க் வேகத்தில் பேர்ஸ்டோவ் (34) சரிந்தார். அடுத்து ஜோ ரூட் களம் வந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஜேசன் ராய் வெளியேறினார். இவர் 85 ரன் (65 பந்து, 9  பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் சரிய ஜோ ரூட்டுடன் கேப்டன் மார்கன் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி  வந்தனர். 29.2வது ஓவரில் 200 ரன் கடந்த போது இங்கிலாந்து வெற்றி உறுதியானது.

முடிவில் இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 226 ரன் எடுத்து வெற்றி பெற்றதோடு அரைஇறுதிக்கு முன்னேறியது. ஜோ ரூட் (49), மார்கன் (45) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸி., தரப்பில் ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 1 விக்கெட் சாய்த்தனர். பவுலிங்கில் கலக்கிய வோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு  செய்யப்பட்டார். வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி நான்காவது முறையாக பைனலுக்கு முன்னேறியது. இந்த அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை (லார்ட்ஸ், ஜூலை 14) எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளுமே இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை. நியூசிலாந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.