இந்தியாவிடம் இலங்கை சரண்டர்’ * ரோகித், ராகுல் சதம்

பதிவு செய்த நாள் : 06 ஜூலை 2019

லீட்ஸ்


உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ரோகித் சர்மா (103), ராகுல் (111) இருவரும் சதம் அடித்து கைகொடுக்க 7 விக்கெட்  வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. லீட்சில் இன்று நடந்த 44வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, இலங்கை அணிகள் மோதின. அரைஇறுதிக்கு இந்தியா ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. மாறாக, அரைஇறுதி வாய்ப்பை இலங்கை தவறவிட்டது. இதனால், இவ்விரு அணிகளுககு  இடையேயான போட்டி சம்பிரதாய ஆட்டமாக அமைந்தது. அதாவது. இந்த போட்டியின் முடிவு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற நிலை இருந்தது.

‘டாஸ்’ வென்ற இலங்கை கேப்டன் கருணாரத்னே முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்தார். இந்திய அணியில் முகமது ஷமி, சகால் நீக்கப்பட்டு குல்தீப், ஜடேஜா வாய்ப்பு பெற்றனர். இலங்கை அணிக்கு கேப்டன் கருணா ரத்னே, குசால் பெரேரா ஜோடி துவக்கம் தந்தது. 2 பவுண்டரியுடன் கணக்கை துவக்கிய கருணாரத்னே  (10) பும்ரா வேகத்தில் சரிந்தார். தொடர்ந்து அசத்திய பும்ரா இம்முறை குசால் பெரேரா (18) விக்கெட்டை வீழ்த்தினார். ஜடேஜா ‘சுழலில்’ மெண்டிஸ் (3), குல்தீப்  பந்தில் பெர்ணான்டோ (20) சிக்கினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய இலங்கை அணி 55 ரன்னில் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இந்த நிலையில், அனுபவ வீரர் மாத்யூசுடன் திருமானே இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் எடுத்து வந்தனர். 24வது ஓவரின் முடிவில் இலங்கை அணி 100 ரன் எடுத்தது. மாத்யூஸ் 76 பந்தில் அரைசதம் அடித்தார். அதே நேரம் திருமானே 63 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடியை பிரிக்க  இந்திய பவுலர்கள் திணறினர். இருநதும், இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்த நிலையில், குல்தீப் பந்தில் திருமானே (53) நடையை கட்டினார். அடுத்து டிசில்வா களம் வந்தார். இந்திய பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்ட மாத்யூஸ் ஒருநாள் போட்டியில் தனது 3வது சதத்தை பதிவு செய்ய இலங்கை  ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இவர் 115 பந்தில் சதம் அடித்தார். இந்த தொடரில் இவரது முதலாவது சதம் இதுவாகும்.

சிறப்பாக விளையாடி வந்த மாத்யூஸ் 113 ரன் (128 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து பும்ரா பந்தில் வெளியேறினார். துசாரா பெரேரா (2) சொதப்பினார்.  முடிவில் இலங்கை அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. டிசில்வா (29), உதானா (1) அவுட்டாகாமல் இருந்தனர. இந்திய தரப்பில் பும்ரா  அதிகபட்சமாக 3 விக்கெட் சாய்த்தார். ஜடேஜா, குல்தீப், பாண்ட்யா, புவனேஷ்வர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ராகுல், ரோகித் சர்மா இருவரும் மிகச் சிறப்பான துவக்கம் தந்தனர். இருவரும் முதல் ஓவரிலிருந்து ‘டாப்-கியரில்’  எகிற ஸ்கோர் ‘ராக்கெட்’ வேத்தில் பறந்தது. குறிப்பாக மலிங்கா பந்துவீச்சை ராகுல் அடித்து நொறுக்கினர். மற்ற பவுலர்களை ரோகித் கவனிக்க ஆட்டம் சூடுபிடித்தது. ரோகித் 48 பந்தில் அரைசதம் அடுத்தார். 18.1 ஓவரில் இந்தியா 100 ரன் எடுத்தது. தன்பங்கிற்கு ராகுல் 67 பந்தில் அரைசதம் அடிததார். இந்த ஜோடியை பிரிக்க இலங்கை கேப்டன் கருணாரத்னே மேற்கொண்ட முயற்சிகள் பலனிக்கவில்லை. எதிரணி பந்து வீச்சை துவம்சம் செய்த ரோகித் 92 பந்தில்    ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 27வது சதத்தை பதிவு செய்ய அரங்கமே அதிர்ந்தது. தவிர, இந்த தொடரில் இவர் அடிக்கும் 5வது சதம் இதுவாகும். ஒரே உலக     கோப்பையில் ஐந்து சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் பெற்றார்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 189 ரன்கள் (30.1 ஓவர்) சேர்த்த நிலையில், ரஜிதா வேகத்தில் ரோகித் சரிந்தார். இவர் 103 ரன் (94 பந்து, 14 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். அடுத்து கேப்டன் கோஹ்லி களம் வந்தார். 33வது ஓவரில் இந்தியா 200 ரன் கடந்த போது வெற்றி உறுதியானது. இதை உறுதி செய்யும் வகையில் ராகுல் 109 பந்தில் சதம் அடித்தார். இது ஒருநாள் போட்டியில் இவரது இரண்டாவது சதமாகும். மலிங்கா ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாசிய ராகுல், அதே  ஓவரில் விக்கெட்கீப்பர் குசால் பெரேராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ராகுல் 111 ரன் (118 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். அடுத்து வந்த ரிஷாப்  பன்ட் 4 ரன் எடுத்து உதானா பந்தில் வெளியேறினார்.

இந்தியா 43.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 265 ரன் எடுத்து இந்த தொடரில் தனது 7வது வெற்றியை பதிவு செய்து சாதித்தது. கேப்டன் கோஹ்லி (34), பாண்ட்யா (7) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை தரப்பில் ரஜிதா, மலிங்கா, உதானா தலா 1 விக்கெட் சாய்த்தனர். சதம் விளாசிய ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியால் லீக் சுற்றில் இந்தியா தான் விளையாடிய 9 போட்டிகளில் 7 வெற்றி, ஒரு தோல்வி, ஒ ஆட்டம் ரத்து  என மொத்தம் 15 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது.