ஜெயித்தும் வெளியேறியது பாக்.,..! * இம்மாம் உல் ஹக் சதம்

பதிவு செய்த நாள் : 05 ஜூலை 2019

லார்ட்ஸ்


உலக கோப்பை தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான கடைசி லீக் போட்டியில் 94 ரன்னில் வெற்றி பெற்ற போதும் அரைஇறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்  வெளியேறியது. இமாம் உல்ஹக் சதமடித்தார். அப்ரிடி 6 விக்கெட் சாய்த்தார்.

இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதில், உலகின் ‘டாப்-10’ அணிகள் பங்கேற்றுள்ளன. லண்டன் லார்ட்சில் இன்று நடந்த 43வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை எதிர்த்து வங்கதேசம் மோதியது. வங்கதேசத்துக்கு அரைஇறுதி வாய்ப்பு தகர்ந்த நிலையில், பாகிஸ்தானுக்கு வாய்ப்பு  மிகக் குறைவாகவே இருந்தது. அதாவது வங்கதேசத்துக்கு எதிராக பாக்., இமாலய வெற்றி பெற்றாலும் வாய்ப்பில்லை என்றே கணிக்கப்பட்டது.

பலத்த எதிர்பார்ப்பிற்கு இடையே போட்டி துவங்கியது. இதில், ‘டாஸ்’ வென்ற பாக்., கேப்டன் சர்பராஸ் அகமது முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்தார். முகமது  சைபுதின் வேகத்தில் பகார் ஜமான் (13) சரிந்தார். பின் இமாம உல் ஹக்குடன் இளம் வீரர் பாபர் ஆசம் இணைந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததோடு பாக்., அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 157 ரன்கள் சேர்த்த நிலையில், பாபர் ஆசம் ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், பாபர் ஆசம் 96 ரன் (98 பந்து, 11 பவுண்டரி) எடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

அதே நேரம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இமாம் உல் ஹக், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 7வது சதத்தை பதிவு செய்தார். இவர் 99 பந்தில் சதம் விளாச  ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இவர் சதம் அடித்த கையோடு முஸ்தபிஜூர் ரஹ்மான் பந்தில் ‘ஹிட் விக்கெட்’ முறையில் ஆட்டமிழந்தார். முகமது ஹபீஸ் (27), ஹாரிஸ் சோகைல் (6), இமாத் வாசிம் (46), வகாப் ரியாஸ் (2), ஷதாப்கான் (1), முகமது ஆமிர் (8) ஆட்டமிழந்தனர். முடிவில் பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 9 விக்கெட்  இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தது. காயமடைந்த கேப்டன் சர்பராஸ் அகமது (3), அப்ரிடி (0) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் தரப்பில் அபாரமாக பந்துவீசிய  முஸ்தபிஜுர் ரஹ்மான் 5 விக்கெட் வீழ்த்தினார். முகமது சைபுதின் 3 விக்கெட் சாய்த்தார்.

இந்த நிலையில், வங்கதேசத்தை 7 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்தால் பாகிஸ்தானுக்கு அரைஇறுதி வாய்ப்பு என சொல்லப்பட்டது. ஆனால், 2வது ஓவரிலேயே  வங்கதேசம் விக்கெட் இழப்பின்றி 8 ரன் எடுக்க பாகிஸ்தானின் அரைஇறுதி வாய்ப்பு தகர்ந்தது.

கடின இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு சவுமியா சர்கார் (22), தமீம் இக்பால் (8) இருவரும் சுமாரான துவக்கம் தந்தனர். வழக்கம் போல் சிறப்பான  ஆட்டத்தை வெளிப்படுத்திய சாகிப் அல் ஹசன் அரைசதம் கடந்தார். அதே நேரம் முஷ்பிகுர் ரஹிம் (16), லின்டன் தாஸ் (32) வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.  அப்ரிடி வேகத்தில் சாகிப் அல் ஹசன் (64) வெளியேற பாக்., வெற்றி பிரகாசமானது. மொசாதக் ஹொசைன் (16), முகமது சைபதின் (0), மகமதுல்லா (28), கேப்டன்  மொர்டசா (15) சொதப்பினர். கடைசியாக அப்ரிடி பந்தில் முஸ்தபிஜுர் ரஹ்மான் (1) வெளியேற வங்கதேச அணி 44.1 ஓவரில் 221 ரன்னுக்கு ஆட்டமிழந்து  பரிதாபமாக தோற்றது. மெகதி ஹசன் (7) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி அதிகபட்சமாக 6 விக்கெட் வீழ்த்தினார். ஷதாப் கான் 2 விக்கெட் சாய்த்தார். பவுலிங்கில் மிரட்டிய அப்ரிடி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.