உலக கோப்பை: பாகிஸ்தான் ‘அவுட்’

பதிவு செய்த நாள் : 03 ஜூலை 2019

லண்டன்

உலக கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான முக்கிய லீக் போட்டியில் இங்கிலாந்து பெற்ற வெற்றியால் பாகிஸ்தானின் அரைஇறுதி வாய்ப்பு தகர்ந்தது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் 12வது உலக கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன்  ஆஸ்திரேலியா, 2வது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலகின் ‘டாப்-10’ அணிகள் பங்கேற்றன. இத்தொடரின் கடைசி லீக் ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த மெகா தொடரில் ஆஸ்திரேலியா (14 புள்ளி), இந்தியா (13 புள்ளி) அணிகள் ஏற்கனவே அரைஇறுதிக்கு முன்னேறி விட்டன. தவிர, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, இலங்கை, வங்கதேசம் அணிகளின் அரைஇறுதி கனவு ஏற்கனவே தகர்ந்து விட்டது. மீதமுள்ள இரண்டு இடத்திற்கு நியூசிலாந்து,  இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையே போட்டி நிலவியது.

இந்த நிலையில், செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் இன்று நடந்த முக்கிய போட்டியில் நியூசிலாந்தை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி மொத்தம் 12  புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததோடு அரைஇறதி வாய்ப்பை உறுதி செய்தது. படுதோல்வி அடைந்த நியூசிலாந்தும் அரைஇறுதிக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. உண்மையைச் சொன்னால் நியூசிலாந்தின் அரைஇறுதி வாய்ப்பு 100 சதவீதம் உறுதி என்றே சொல்ல வேண்டும்.

நியூசிலாந்து அணி தனது லீக் சுற்றின் முடிவில் 11 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் நீடிக்கிறது. பாகிஸ்தான் தனது கடைசி போட்டியில் வங்கதேசத்தை  (ஜூலை 5) எதிர்கொள்கிறது. இப்போட்டியில் பாகிஸ்தான் எந்த மாதிரியான வெற்றி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 316 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 400 ரன் எடுத்தால் வங்கதேசத்தை 86 ரன்னில் சுருட்ட வேண்டும். இப்படி நடக்க வாய்ப்பில்லை. இருந்தும் நியூசிலாந்தின் அரைஇறுதி கனவு பாக்.,-வங்கதேச போட்டி முடிவில்  நனவாகும்.

இதையடுத்து, இந்த மெகா தொடரின் முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்த்து நியூசிலாந்து மோதுகிறது. இதைத் தொடர்ந்து நடக்க உள்ள இரண்டாவது அரைஇறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.