அரைஇறுதியில் இங்கிலாந்து...! * நியூசிலாந்தை வீழ்த்தி அசத்தல்

பதிவு செய்த நாள் : 03 ஜூலை 2019

செஸ்டர் லீ ஸ்டிரீட்


உலக கோப்பையில் மூன்றாவது அணியாக இங்கிலாந்து அரைஇறுதிக்கு முன்னேறியது. நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் பேர்ஸடோவ் (106) சதம், மார்க் உட் (3 விக்கெட்) கைகொடுக்க 119 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில், உலகின் ‘டாப்-10’  அணிகள் பங்கேற்றுள்ளன. செஸ்டர் லீ ஸ்டிரீட்டில் இன்று நடந்த 41வது லீக் போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்து உள்ளூர் அணியான இங்கிலாந்து மோதியது.  இப்போட்டி இரு அணிகளுக்கும் முக்கியம் என்ற போதும் இங்கிலாந்துக்கு வெற்றி அவசியம் என இருந்தது.

பரபரப்பான இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன் முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியில் பெர்குசன், இஷ் சோதி  நீக்கப்பட்டு சவுத்தீ, ஹென்றி வாய்ப்பு பெற்றனர். இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.

இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். பந்து நாலா புறமும்  பறக்க ஸ்கோர் ‘ராக்கெட்’ வேகத்தில் பறந்தது. 14.4 ஓவரில் இங்கிலாந்து 100 ரன் எடுத்த போது இப்போட்டியில் மிகப் பெரிய ஸ்கோரை பதிவு செய்யும் என்ற  எதிர்பார்ப்பு காணப்பட்டது. இதை உறுதிப் படுத்தும் வகையில் ஜேசன் ராய் 56 பந்தில் அரைசதம் அடித்தார். இவரைத் தொடர்ந்து 50 பந்தில் பேர்ஸ்டோவ்  அரைசதம் அடிக்க அரங்கமே அதிர்ந்தது. இந்த ஜோடியை பிரிக்க நியூசிலாந்து பவுலர்கள் திணறினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 123 ரன் (18.4 ஓவர்) சேர்த்த நிலையில், நீஷம் பந்தில் ஜேசன் ராய் ஆட்டமிழந்தார். இவர் 60 ரன் (61 பந்து, 8 பவுண்டரி) எடுத்தார். அடுத்து ஜோ ரூட் களம் வந்தார். இவர் 24 ரன் மட்டுமே எடுத்து பவுலட் வேகத்தில் சரிந்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பேர்ஸ்டோவ்  ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 9வது சதத்தை பதிவு செய்ய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இவர் 95 பந்தில் சதம் விளாசினார். தவிர, இந்தியாவுக்கு எதிரான கடந்த  போட்டியிலும் பேர்ஸ்டோவ் சதம் விளாசியது நினைவிருக்கும். இவர் 106 ரன் (99 பந்து, 15 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்த நிலையில், ஹென்ரி பந்தில் ‘ஸ்டெம்புகள் சிதற’ போல்டானார். பட்லர் (11), ஸ்டோக்ஸ் (11), வோக்ஸ் (4) சொதப்பினர். கடைசி கட்டத்தில் கேப்டன் மார்கன் (42) கைகொடுத்தார். அடில் ரஷித் 12 பந்தில் 16 ரன் எடுத்தார். முடிவில் இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது. பிளங்கட் (15), ஜோபரா ஆர்ச்சர் (1) அவுட்டாகாமல்     இருந்தனர். நியூசில £ந்து தரப்பில் பவுல்ட், ஹென்ரி, நீஷம் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு வோக்ஸ், வேகத்தில் தொல்லை கொடுத்தார். இவரது பந்தில் நிகோலஸ் ‘டக்-அவுட்’ ஆனார். ஆர்ச்சர் பந்தில் கப்டில் (8) நடையை கட்டினார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் சரிய கேப்டன் வில்லியம்சனுடன் அனுபவ வீரர் டெய்லர் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி வந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக வில்லியம்சன் (27), டெய்லர் (28) இருவரும் அடுத்தடுத்து ரன் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர். தொடர்ந்து நீஷம் (19), கிராண்ட்ஹோம் (3) வெளியேற இங்கிலாந்து வெற்றி உறுதியானது.

இருந்தும் ஒருமுனையில் போராடிய லதாம் 57 பந்தில் அரைசதம் அடித்தார். இவருக்கு சான்ட்னர் கம்பெனி கொடுத்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி   வந்த லதாம் 57 ரன் (65 பந்து, 5 பவுண்டரி) எடுத்து பிளங்கட் வேகத்தில் சரிந்தார். சான்ட்னர் (12), ஹென்ரி (7) சொதப்பினர். கடைசியாக ரஷித் ‘சுழலில்’ பவுலட் (4) சிக்க நியூசிலாந்து அணி 45 ஓவரில் 186 ரன்னுக்கு ஆட்டமிழந்து பரிதாபமாக தோற்றது. சவுத்தீ (7) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில்  அதிகபட்சமாக மார்க் உட் 3 விக்கெட் சாய்த்தார். சதம் விளாசிய பேர்ஸ்டோவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யபட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 9 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்வி என மொத்தம் 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்திற்கு  முன்னேறியதோடு அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்தது. தோல்வியுற்ற நியூசிலாந்து அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு உள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில்  பாகிஸ்தான் 316 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 400 ரன் எடுத்தால் வங்கதேசத்தை 86 ரன்னில் சுருட்ட  வேண்டும். இப்படி நடக்க வாய்ப்பில்லை. இருந்தும் நியூசிலாந்தின் அரைஇறுதி கனவு பாக்.,&வங்கதேச போட்டி முடிவை பொறுத்தே அமையும்.