உலக கோப்பை: அரைஇறுதியில் இந்தியா * ரோகித் சாதனை சதம்

பதிவு செய்த நாள் : 02 ஜூலை 2019

பர்மிங்காம்


உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து இரண்டாவது அணியாக இந்தியா அரைஇறுதிக்கு முன்னேறியது. பர்மிங்காமில் இன்று நடந்த முக்கிய லீக் போட்டியில் வங்கதேசத்தை 28 ரன்னில் வீழ்த்தியது. இந்த தொடரில் ரோகித் சர்மா தனது நான்காவது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. பர்மிங்காமில் இன்று நடந்த 40வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியாவை எதிர்த்து  வங்கதேசம் மோதியது. இந்திய அணி 7 போட்டிகளில் 5 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ஆட்டம் ரத்து என மொத்தம் 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிராக வெற்றி பெற்றால் அரைஇறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலை இருந்தது. அதே நேரம் வங்கதேச அணிக்கும் இப்போட்டியில் வெற்றி அவசியம் என இருந்தது. இந்த அணி இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வி, ஒரு ஆட்டம் ரத்து என மொத்தம் 7 புள்ளிகள் எடுத்திருந்தது. ஒருவேளை இந்தியாவிடம் தோற்றால் தொடரிலிருந்து வங்கதேச அணி வெளியேறி விடும் என்ற நிலை இருந்தது.

இரண்டு அணிகளுக்கும் வெற்றி முக்கியம் என்பதால் இப்போட்டி அதிக எதிர்ப்ர்ப்பை ஏற்படுத்தியது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராத் கோஹ்லி முதலில்  பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்திய அணியில் குல்தீப், கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக்,  புவனேஷ்வர் குமார் இடம் பெற்றனர். வங்கதேச அணியில் காயமடைந்த மகமதுல்லா இடத்தில் சபிர் ரஹ்மான் தேர்வானார். இதே போல் ரூபெல் ஹொசைன்  அணிக்கு திரும்பினார்.

வங்கதேச கேப்டன் மொர்டசா வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் ரோகித் சிக்சர் அடித்தார். அந்த ஓவரில் 10 ரன் கிடைத்தது. ரோகித் 9 ரன் எடுத்த நிலையில், தமீம் இக்பால் எளிதான கேட்சை தவறவிட்டார். இதைப் பயன்படுத்தி ரோகித் அதிரடியில் இறங்கினார். இவருக்கு ராகுல் கம்பெனி கொடுத்தார். அனைத்து  பவுலர்களையும் ரோகத் விளாச பந்து நாலா, புறமும் பறந்தது. அவ்வப்போது ராகுலும் தன்னை இணைத்துக் கொள்ள ஸ்கோர் ‘ராக்கெட்’ வேகத்தில் பறந்தது.  அதிரடியாக விளையாடிய ரோகித் 45 பந்தில் அரைசதம் அடுத்தார். இந்தியா 17.2 ஓவரில் 100 ரன் கடந்த போது இப்போட்டியில் மிகப் பெரிய ஸ்கோரை பதிவு  செய்யும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.

எழுச்சியுடன் விளையாடிய ராகுல், 57 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை பிரிக்க வங்கதேச கேப்டன் மொர்டசா, 7 பவுலர்களை பயன்படுத்தினார். இதில், சாகிப் அல் ஹசன் மட்டும் சிறப்பாக பந்துவீசினார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித், சவுமியா சர்கார் பந்தில் ஒரு ரன் எடுத்து ஒருநாள்கிரிக்கெட்டில் தனது 26வது சதத்தை பதிவு செய்ய அரங்கமே அதிர்ந்தது. இவர் 90 பந்தில் சதம் விளாசினார். இந்த தொடரில் ரோகித்தின் நான்காவது சதம்  இதுவாகும். சதம் அடித்த பின் ஒரு பவுண்டரி விளாசிய ரோகித், சவுமியா சர்காரின் அதே ஓவரில் லின்டன் தாசிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் 104 ரன் (92 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 180 ரன் (29.2 ஓவர்) எடுத்தது. இதுவே இந்த உலக கோப்பையில் முதல் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.

அடுத்து கேப்டன் கோஹ்லி களம் வந்தார். 34வது ஓவரில் இந்தியா 200 ரன் எடுத்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், ரூபெல் ஹொசைன் வேகத்தில்  ராகுல் சரிந்தார். இவர் 77 ரன் (92 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். பின் கோஹ்லியுடன் இளம் வீரர் ரிஷாப் பன்ட் இணைந்தார். இருவரும் சற்றே  அதிரடியில் இறங்கினர். ஆட்டத்தின் 39வது ஓவரை முஸ்தபிஜுர் ரஹ்மான் வீசனார். இந்த ஓவரில் கேப்டன் கோஹ்லி (26), பாண்ட்யா (0) ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். தவிர, இந்த ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அதவாது இந்தியா 300 ரன்னை எட்டுமா என்ற சந்தேகம் எழுந்தது,

இருந்தும் ரிஷாப் பன்ட் அதிரடியாக விளையாடி அசத்தினார். இவருக்கு தோனி கம்பெனி கொடுத்தார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், சாகிப் அல் ஹசன் பந்தை தேவை இல்லாமல் தூக்கி அடித்து பன்ட் ஆட்டமிழந்தார். இவர் 48 ரன் (41 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். தினேஷ் கார்த்திக் (8) கைகொடுக்கவில்லை. கடைசி கட்டத்தில் அசத்திய தோனி 33 பந்தில் 4 பவுண்டரி உட்பட 35 ரன் எடுத்தார். புவனேஷ்வர் குமார் (2), முகமது ஷமி (0) வெளியேற இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்தது. பும்ரா (0) அவுட்டாகாமல் இருந்தார். வங்கதேச தரப்பில் முஸ்தபிஜுர் ரஹ்மான் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் (10-1-59-5) வீழ்த்தினார். சாகிப் அல் ஹசன், சவுமியா சர்கார், ரூபெல் ஹொசைன் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

கடின இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு தமீம் இக்பால் (22), சவுமியா சர்கார் (33) இருவரும் சுமாரான துவக்கம் தந்தனர். வழக்கம் போல் சாகிப் அல் ஹசன்  சிறப்பான ஆட்டத்தை வெளிபபடுத்தி அரைசதம் கடந்தார். அதே நேரம் முஷ்பிகுர் ரஹிம் (24), லின்டன் தாஸ் (22), மொசாதக் ஹொசைன் (3) வெளியேறி    அதிர்ச்சி கொடுத்தனர். இந்த அணி அதிகம் நம்பியிருந்த சாகிப் அல் ஹசன் முக்கிய கட்டத்தில் வெளியேற ஆட்டம் இந்தியா வசம் திரும்பியது. சாகிப் 66 ரன் (74 பந்து, 6 பவுண்டரி) எடுத்து பாண்ட்யா வேகத்தில் சரிந்தார். இந்த நேரத்தில் சபிர் ரஹ்மான், முகமது சைபுதின் இஇருவரும் இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்க ஆட்டம் பரபரப்பானது. முகமது ஷமி, சகால் பந்துவீச்சை இவர்கள் விளாசினர். 10 ஓவரில் 90 ரன் தேவைப்பட்டது.

முக்கிய கட்டத்தில் பும்ரா திருப்புமனை தந்தார். இவரது வேகத்தில் சபிர் ரஹ்மான் (36) கிளீன் போல்டானார். புவனேஷ்வர் பந்தில் கேப்டன் மொர்டசா (8)  நடையை கட்டினார். இருந்தும் ஒருமுனையில் சைபுதின் போராட 4 ஓவரில் 43 ரன் தேவைப்பட்டது. பும்ரா பந்தை பவுண்டரிக்கு விளாசிய சைபதின் அரைசதம்  அடித்தார். ‘தலை போய் வால்’ ஆட இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பும்ரா பந்தில் ரூபெல் ஹொசைன் (9) போல்டானார். அடுத்த பந்தில் முஸ்தபிஜுர்  ரஹம்ன் போல்டாக வங்கதேச அணி 48 ஓவரில் 286 ரன்னுக்கு ஆட்டமிழந்து 28 ரன்னில் பரிதாபமாக தோற்றது. முகமது சைபுதின் 51 ரன் (38 பந்து, 9 பவுண்டரி) எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 4 விக்கெட் சாய்த்தார். பாண்ட்யா, 3, சகால், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார்  தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சதம் விளாசிய ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இதுவரை விளையாடிய 8 போட்டியில் 6 வெற்றி, 1 தோல்வி, ஒரு ஆட்டம் ரத்து என மொத்தம் 13 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிப்பதோடு அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்தது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையை (லீட்ஸ், ஜூலை 6) எதிர்கொள்கிறது, அதே ரேநம் இந்தியாவிடம் தோற்ற வங்கதேசத்தின் அரைஇறுதி கனவு தகர்ந்தது. இந்த அணி 8 ஆட்டத்தில் 3 வெற்றி, 4 தோல்வி, ஒரு ஆட்டம் ரத்து என மொத்தம் 7 புள்ளிகள் பெற்றுள்ளது. வங்கதேசம் தனது கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை (லண்டன், ஜூலை 5) சந்திக்கிறது. இப்போட்டி பாகிஸ்தான் அணிக்கு முக்கியமானது, அதாவது அந்த அணிக்கு வெற்றி முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.