முக்கிய ஆட்டத்தில் இலங்கை ‘அவுட்’

பதிவு செய்த நாள் : 28 ஜூன் 2019

செஸ்டர் லீ ஸ்டிரீட்


உலக கோப்பை தொடரில் வெற்றி முக்கியம் என்ற நிலையில் களமிங்கிய இலங்கை அணி தென் ஆப்ரிக்காவிடம் பரிதாபமாக தோற்றது. இதையடுத்து இந்த அணியின் அரைஇறுதி வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், உலகின் ‘டாப்-10’ அணிகள் பங்கேற்றுள்ளன. செஸ்டர் லீ ஸ்டிரீட்டில் இன்று நடந்த 35வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் இலங்கையை எதிர்த்து தென் ஆப்ரிக்கா மோதியது. தென் ஆப்ரிக்க அணி அரைஇறுதி வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது. அதே நேரம் இலங்கை அணி இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசி முதலில் ‘பீல்டிங்கை’ தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணியில் மில்லர், நிகிடி நீக்கப்பட்டு டுமினி, பிரிட்டோரிஸ் சேர்க்கப்பட்டனர். இலங்கை தரப்பில் பிரதீப் இடத்தில் லக்மல் விளையாடினார்.

ரபாடா வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் கேப்டன் கருணாரத்னே (0) அவுட்டானார். பின் இணைந்த குசல் பெரேரா (30), அவிஷ்கா பெர்ணான்டோ (30) ஜோடி ஆறுதல் தந்தது. பிரிட்டோரிஸ் பந்தில் குசல் மெண்டிஸ் (23) ஆட்டமிழந்தார். மிடில்&ஆர்டரில் களமிறங்கிய மாத்யூஸ் (11), ஜீவன் மெண்டிஸ் (18) நிலைக்கவில்லை. டுமினி சுழலில் தனஞ்செயா டி சில்வா (24) சிக்கினார். திசாரா பெரேரா (21) சோபிக்கவில்லை. ரபாடா வேகத்தில் இசுரு உதானா (17) அவுட்டானார். மலிங்கா (4) நிலைக்கவில்லை. முடிவில் இலங்கை அணி 49.3 ஓவரில், 203 ரன்களுக்கு ஆல்&அவுட் ஆனது. சுரங்கா லக்மல் (5) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா   சார்பில் பிரிட்டோரிஸ், மோரிஸ் தலா 3, ரபாடா 2 விக்கெட் கைப்பற்றினர்.

எளிதான இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணிக்கு மலிங்கா வேகத்தில் தொல்லை கொடுத்தார். இவரது ‘யார்க்கரில்’ குயின்டன் டி காக் (15) கிளீன் போல்டானார். பின் ஆம்லாவுடன் கேப்டன் டுபிளசி இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி வந்தனர். 18.2 ஓவரில் தென் ஆப்ரிக்கா 100 ரன எடுத்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆம்லா, 56 பந்தில் அரைசதம் அடித்தார். இவருக்கு கம்பெனி கொடுத்த டுபிளசி 70 பந்தில் அரைசதம் அடிக்க இலங்கை தோல்வி உறுதியானது. முடிவில் தென் ஆப்ரிக்க அணி 37.2 ஒவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 206 ரன் எடுத்து தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. ஆம்லா (80), டுபிளசி (96) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை தரப்பில் மலிங்கா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக பிரிட்டோரிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இலங்கை அணியின் இந்த தோல்வி அரைஇறுதி வாய்ப்பை கிட்டதட்ட தகர்த்து விட்டது என்றே சொல்ல வேண்டும். மீதமுள்ள இரண்டு போட்டியில் வெற்றி பெற்றால் கூட மற்ற அணிகளின் செயல்பாடுகளை வைத்தே இந்த அணியின் அரைஇறுதி வாய்ப்பு முடிவாகும்.