ரோகித் அவுட் ஏற்படுத்திய சர்ச்சை

பதிவு செய்த நாள் : 27 ஜூன் 2019

மான்செஸ்டர்


விண்டீஸ் அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு அவுட் தரப்பட்டது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. மான்செஸ்டரின் ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடந்த லீக் சுற்றில் இந்தியா, விண்டீஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். கீமர் ரோச் பந்தில்  சிக்சர் அடித்த ரோகித் சர்மா, அதே ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்டார். இதை பிடித்த விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப், அவுட் கேட்டு அப்பீல் செய்தார். அம்பயர் தர மறுக்க டி.ஆர்.எஸ்., முறையில் அப்பீல் செய்யப்பட்டது.

பந்து பேட்டில் பட்ட அதே நேரத்தில் கால் பேடில் பட்டது போலவும் இருந்தது. இதுகுறித்து உறுதியாக தெரியவில்லை. சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு   சாதகமாக தர வேண்டும். மாறாக மூன்றாவது அம்பயர் மைக்கேல் கப் (இங்கிலாந்து) உடனே அவுட் கொடுக்க, ரோகித் சர்மா உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஹாட் ஸ்பாட் எங்கே? டி.ஆர்.எஸ்., தொழில்நுட்பம் என்பது ஸ்னிக்கோ மீட்டர், பால் டிராக்கிங் மற்றும் ஹாட் ஸ்பாட் தொழில் நுட்பம் இணைந்தது. பந்து பேட்டில் பட்டதா, இல்லையா என, ஸ்னிக்கோ மீட்டரில் சரியாகத் தெரியாத போது, ஹாட் ஸ்பாட் முறையில் பார்க்க வேண்டும். இதில் தெர்மல் இமேஜிங் வீடியோவை பார்க்கும் போது, பந்து பட்டிருந்தால் பேட்டில் வெள்ளை நிற டாட் ஏற்படும். இதை வைத்து உறுதி செய்யலாம். ரோகித் சர்மா விஷயத்தில் இப்படி எதுவும் பார்க்கவில்லை. ஐ.சி.சி., சார்பில் நடத்தப்படும் உலக கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் இப்படி அரை குறையாக அவுட் தரப்பட்டது சரியல்ல என ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.