சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

21 மே 2020, 05:25 PM

கொரோனா ஊரடங்கால் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு, ‘இந்தியன் 2’ படத்தை கைவிட்டு விட்டார்கள் என்று தகவல் பரவியது. கொரோனா நெருக்கடியால் லைகா நிறுவனத்தின் வியாபாரங்களில் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அவர்களால் மீண்டும் சினிமாவில் முதலீடு செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.

ஆனால் இறுதி கட்ட பணிகள் தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தவுடனே, ‘இந்தியன் 2’ படத்தின் எடிட்டிங் பணிகளை படக்குழு தொடங்கிவிட்டது. இரண்டு இடங்களில் இதன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளே அதிக அளவில் இருப்பதால் அவற்றைச் சுருக்கி வருகிறது படக்குழு. கொரோனா ஊரடங்கு முடிவதற்குள் அந்தப் பணிகளை முழுமையாக முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

படப்பிடிப்புக்கும் தமிழக அரசு அனுமதி கிடைத்தவுடன் தொடங்கப்படும் என்கிறார்கள் படக்குழுவினருக்கு நெருக்கமானவர்கள். ஈவிபி அரங்கில்தான் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டது. எனவே அங்கிருந்து அரங்குகள் அனைத்தையும் பல்லாவரம் அருகில் உள்ள பின்னி மில்லுக்கு மாற்றிவிட்டது படக்குழு. அடுத்தகட்டப் படப்பிடிப்பு அங்குதான் தொடங்கவுள்ளது.