தமிழில் பேசி கொரோனா விழிப்புணர்வு தந்த தமன்னா

06 ஏப்ரல் 2020, 02:48 PM

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு ஏப்ரல் 14 வரை 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து உள்ளது. 

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி உள்ளனர். சினிமா படப்பிடிப்புகள் ரத்தானதால் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட சினிமா துறையினர் அனைவரும் வீட்டில் இருக்கிறார்கள். 

ஊரடங்கை மீறி சிலர் வெளியே சுற்றவும் செய்கின்றனர். அவர்களால் கொரோனா மேலும் பரவலாம் என்ற பயம் மக்களிடையே இருக்கிறது.

அவர்களுக்கு அறிவுரை சொல்லும் வகையில் நடிகர்-நடிகைகள் பலர் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை தமன்னா வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:- “நம்மால் கோவிட்-19 வைரசை எளிதாக ஜெயிக்க முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது சின்ன சின்ன விஷயங்கள்தான். நாம் அனைவரும் இந்த நேரத்தில் வீட்டில்தான் இருக்க வேண்டும். 

இப்போது அதுதான் நமக்கு பாதுகாப்பு. கொரோனா வைரசிடம் இருந்து ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது நமது கையில் தான் இருக்கிறது. எனவே அரசாங்கம் சொல்வதை கேட்டு சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். சமூக இடைவேளையில் நின்று ஒன்றிணைவோம். கொரோனா வைரசை ஒழிப்போம்”. இவ்வாறு தமன்னா கூறியுள்ளார். 

அவர் தமிழில் பேசி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.