காதலர் தின புகைப்படத்தைப் பகிர்ந்த விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா!

16 பிப்ரவரி 2020, 07:27 AM

புத்தாண்டன்று வெளியிட்டது போலவே இந்தமுறையும் காதலர் தினத்துக்காக முத்தம் கொடுத்துக்கொள்ளும் புகைப்படத்தைச் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்கள் நடிகர் விஷ்ணு விஷாலும் பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும்.

2011 டிசம்பரில் நடிகர் கே. நட்ராஜின் மகளான ரஜினியைக் காதலித்துத் திருமணம் செய்தார் நடிகர் விஷ்ணு விஷால். 2017-ல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 2018 நவம்பரில் மனைவி ரஜினியை விவாகரத்து செய்துள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் அறிவித்தார்.

ஜுவாலா கட்டா, பாட்மிண்டன் வீரர் சேதன் ஆனந்தைத் திருமணம் செய்து, 2011-ல் விவாகரத்து செய்தார்.

கடந்த வருட ஜூன் மாதம், ஜுவாலா கட்டாவுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்தார் விஷ்ணு விஷால். இதனால் இருவரும் காதலிப்பதாகக் கூறப்பட்டது. பிறகு, புத்தாண்டையொட்டி விஷ்ணு விஷாலும் ஜுவாலா கட்டாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டன. இதன்மூலம் இவ்விருவரும் தங்கள் காதலை வெளியுலகுக்கு அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்.

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இருவரும் முத்தம் கொடுத்துக் கொள்ளும் மற்றொரு புகைப்படத்தைச் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்கள்.