26 நவம்பர் 2019, 06:48 PM
தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் எம்.என். நம்பியார். மார்ச் 7, 1919-ல் பிறந்த இவர் 2008-ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி மறைந்தார். இது நம்பியாருக்கு நுாற்றாண்டு. அவர் மறைந்த நாளன்று அவரது குடும்பத்தினர் சார்பாக நம்பியாரை நினைவுபடுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
நம்பியாரின் மகன் மோகன் நம்பியார், பேரன் சித்தார்த் நம்பியார் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல. கணேசன், இயக்குனர்கள் எஸ்.பி. முத்துராமன், பி. வாசு, இசையமைப்பாளர் இளையராஜா. நடிகர்கள் சிவகுமார், ராஜேஷ், டில்லி கணேஷ், நடிகைகள் காஞ்சனா, ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா, சச்சு, விஜயகுமார் ஐபிஎஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
நடிகர் சிவகுமார் பேசும்போது, ‘‘1955-ல் ‘பெண்ணரசி’ என்ற படத்தில் நம்பியார் அண்ணன் நடித்தார். அவர் சல்யூட் அடிக்கும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. நம்பியார் சிவாஜியை விட கம்பீரமாக நடக்கக் கூடியவர். அந்த காலத்தில் நடித்த அனைவருமே உண்மையிலேயே பலசாலிகள். அந்த வரிசையில் வந்தவர் நம்பியார். அவருடன் நடித்த அனுபவங்கள் இனிமையானவை.
அவர் நினைத்திருந்தால் பெரிய கதாநாயகனாக வலம் வந்திருக்கலாம். அவர் ராமனாகவே வாழ்ந்தார். மனைவியை தவிர வேறு பெண்ணை தவறாக பார்த்ததுகூட கிடையாது. மது, புகை இல்லாமல் கடைசி வரை வாழ்ந்து காட்டியவர்’’ என்றார்.