இருட்டு பயம்!

07 நவம்பர் 2019, 05:32 PM

‘குற்றம் கடிதல்,’ ‘ஆண்டவன் கட்டளை,’ ‘காலா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்ப வர் பாவல் நவகீதன். அவர் இயக்கியி ருக்கும் படம் ‘வி1.’ இதில் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணுபிரியா நடித்துள்ளார். மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உட்பட பலர் நடித்துள்ளனர்.

அரவிந்த் தர்மராஜ், ராமு, சரவணன் பொன்ராஜ் தயாரித்துள்ளனர் கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரோனி ரப்ஹெல் இசையமைத்துள்ளார். படத்தின் பணிகள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. படம் பற்றி இயக்குனர் பாவல் நவகீதன் கூறியதாவது:–

‘‘காவல் துறையில் கைரேகை பிரிவில் பணியாற்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் ஒரு பெரிய குற்றத்தை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இதில் முக்கியமாக அந்த போலீஸ் அதிகாரிக்கு இருட்டைக் கண்டால் பயப்படுகிற ஒரு குறைபாடு உண்டு. இந்த சூழ்நிலையில் அவர் எப்படி அந்த குற்றத்தை கண்டுபிடிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாகவும், திகில் கலந்தும் சொல்கிறோம். கிரைம் படங்கள் சினிமாவுக்கு புதிது இல்லை என்றாலும் இதன் திரைக்கதையும், குற்றத்தை கண்டுபிடிக்கும் போக்கும், புதுமையாக இருக்கும்.

கொலையாளி யார் என்பதை கடைசி நிமிடம் வரை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் இந்த படத்தின் பலம். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன. தணிக்கை குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். அவர்களும் குற்றவாளி யார் என்பதை எங்களால் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது. படம் டிசம்பர் மாதம் வெளிவருகிறது.’’