விதி மீறக்கூடாது!

07 நவம்பர் 2019, 05:30 PM

1964-ல் சிவாஜி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘பச்சை விளக்கு.’ இதே தலைப்பில் தற்போது ஒரு படம் உருவாகி உள்ளது. டி.ஜி. திங்க் மீடியா ஒர்க்ஸ் படநிறுவனம் சார்பில் டாக்டர். மணிமேகலை தயாரித்து வரும் இப்படத்தின் கதை. திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி கதையின் நாயகனாக நடிக்கிறார் டாக்டர். மாறன். இவருடன் புதுமுகங்கள் ஆதிக் மாறன், அம்மணி ஸ்ரீமகேஷ் தீஷா, தாரா, ரூபிகா ஆகியோருடன் மனோபாலா, இமான் அண்ணாச்சி. நெல்லை சிவா, நந்தகுமார், உட்பட பலர் நடித்துள்ளனர்.

விதி மீறிய காதலும், பயணமும் ஊர் போய் சேராது என்பதை விளக்கும் இந்த படம் குறித்து இயக்குனர் டாக்டர். மாறன் கூறியதாவது:– ‘‘இந்த படம் காதலுடன் சாலை பாதுகாப்பையும் வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ளது. உலகில் பிறந்த எவரும் சாலையை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அப்படி சாலையை பயன்படுத்தும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சுவாரஸ்யமாக சொல்லும் படம், போக்குவரத்து காவல்துறையின் பெருமை பேசுகிற படமாகவும் உருவாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி, திருப்போரூர், திருவண்ணாமலை உட்பட பல இடங்களில் நடைபெற்றுள்ளது. இதில் இமான் அண்ணாச்சி போக்குவரத்து சப்–-இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். இதில் இன்னொரு முக்கிய அம்சமாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு பேய் ஒன்றும் தண்டனை தருகிறது அது என்ன மாதிரியான தண்டனை என்பதை படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். வரும் டிசம்பர் 6ம் தேதி இப்படத்தை திரையிட திட்டமிட்டுள்ளோம்.’’  இப்படத்தின் ஒளிப்பதிவை பாலாஜி கவனிக்க. ‘வேதம் புதிது’ தேவேந்திரன் இசையமைத்துள்ளார்.