ஏ.ஆர். ரஹ்மான் மாணவர்!

14 ஆகஸ்ட் 2019, 01:37 PM

சென்னையில் சமீபத்தில் நடந்த  ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பியானோ வாசித்திருந்தார் சிறுவயதிலேயே உலகப்புகழ் பெற்ற லிடியன் நாதஸ்வரம்.  அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற 'தி வேர்ல்ட்'ஸ் பெஸ்ட்' என்ற இசைப் போட்டியில் கலந்து கொண்டு ரூ.7 கோடி பரிசு வென்ற சென்னை சிறுவன் லிடியன் நாதஸ்வரம், ஏ.ஆர். ரஹ்மான் இசைப்பள்ளி மாணவர். சிறுவனாக இருந்தாலும் பல நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக செல்கிறார் லிடியன். சமீபத்தில் ஈரோட்டில் நடந்த ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்டு, மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்து, மாணவர்கள் முன்னிலையில் பியானோ வாசித்தும் அவர்களை உற்சாகப்படுத்தினார்.

அந்த நிகழ்ச்சியில் லிடியனின் தந்தையும் இசையமைப்பாளருமான வர்மன் சதம் பேசுகையில் லிடியன் ‘உலகப்புகழ் பெற்று, பெருமைகளையும் பாராட்டுகளையும் பெற்றாலும் என் மகனுக்கு நான் ஒரு ரசிகன். இப்போது லிடியன் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் பயிற்சி செய்கிறார். இந்த வயது மிகவும் அற்புதமான வயது. இதை டெக்னாலஜி எனும் செல்போன், யூ டியூப், கேம்ஸ் ஆகியவற்றில் நேரத்தை செலவிடாமல் இருப்பது நல்லது. என் மகனை நான் பள்ளிக்கு அனுப்பவில்லை. ஆனால் பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வருகிறார். சச்சின் தெண்டுல்கர் போன்றோரைத்தான் அப்படி பார்த்துள்ளேன். என் மகனும் அப்படிச் செல்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது" என்றார். விழாவில் புகழ்பெற்ற ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் பேசும்போது, "வருங்காலத்தில் உலகம் மறக்கமுடியாத இசையமைப்பாளர்களில் ஒருவராக லிடியன் இருப்பார். 2002ல் இருந்து ஏ.ஆர்.ரஹ்மானை  தெரியும். அவரிடம் இருக்கும் அதே அடக்கம், திறமை லிடியனிடம் உள்ளது" என்றார்.