சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 404 – எஸ்.கணேஷ்

06 ஆகஸ்ட் 2019, 06:03 PM

நடிகர்கள் : விஷ்ணு விஷால், சுனைனா, நந்திதாதாஸ், சரண்யா பொன்வண்ணன், அனுபமா குமார், சமுத்திரக்கனி, வர்ஷா அஸ்வதி மற்றும் பலர்.

இசை : என்.ஆர். ரகுநந்தன், ஒளிப்பதிவு :   பாலசுப்ரமணியம், எடிட்டிங் : காசி விஸ்வநாதன், தயாரிப்பு : ரெட் ஜெயண்ட் மூவீஸ் (உதயநிதி ஸ்டாலின்), வசனம் : ஜெயமோகன், திரைக்கதை,  இயக்கம் : சீனு ராமசாமி.

வயது முதிர்ந்த பெண்மணியான எஸ்தர் (நந்திதா தாஸ்) தினமும் கடற்கரைக்குச் செல்வதோடு தனது தோட்டத்தில் கணவருக்காக பிரார்த்தனையில் ஈடுபடுகிறார். அவருடன் வீட்டில் வந்து தங்கும் அவரது மகனும் மருமகளும் வீட்டை விற்பது பற்றி பேசுகிறார்கள். கடலுக்குச் சென்ற தனது கணவருக்காக காத்திருப்பதாக பதிலளிக்கும் எஸ்தர் வீட்டை விற்க மறுத்துவிடுகிறார். இருபத்தைந்து வருடங்களாக திரும்பி வராத கணவருக்காக காத்திருக்கும் தாயிடம் கோபம் கொள்ளும் மகனும், மருமகளும் அவர் கடற்கரைக்கு சென்றிருக்கும் நேரத்தில் தோட்டத்தில் அவர் தினமும் பிரார்த்தனை செய்யும் இடத்தை தோண்டிப் பார்க்கிறார்கள். எலும்புக்கூட்டைப் பார்த்து அதிரும் அவர்கள் போலீசுக்கு தகவல் தருகிறார்கள். இந்த வழக்கை கையிலெடுக்கும் இன்ஸ்பெக்டர் ஆக்னஸ் (வர்ஷா அஸ்வதி) எஸ்தரிடம் விசாரணை நடத்துகிறார். எஸ்தரின் வார்த்தைகளில் கடந்த காலம் கண்முன்னே விரிகிறது.

பொறுப்பில்லாமல் குடிக்கு அடிமையாகி கிடக்கும் அருளப்பசாமியால் (விஷ்ணு விஷால்) அவரது பெற்றோர் வருந்துகிறார்கள். உழைப்பாளிகளான அவர்கள் அருளின் மேல் உள்ள பாசத்தால் அவரை கைவிட முடியாமல் திருத்துவதற்காக பல வழிகளிலும் முயற்சிக்கிறார்கள். அனாதையான எஸ்தரை (சுனைனா) சிஸ்டர் பெனிதா (அனுபமா குமார்) ஆதரித்து வளர்க்கிறார். சர்ச்சிலேயே வளரும் எஸ்தரை அருள் விரும்ப ஆரம்பிக்கிறான். எஸ்தரை மணப்பதற்காக சிஸ்டர் பெனிதாவின் வார்த்தைப்படி கொஞ்சம் கொஞ்சமாக குடியிலிருந்து மீளும் அருள் உப்பள வேலைக்காக வேறு ஊருக்குச் சென்று சம்பாதிக்கிறான். அங்கு வேறு காதல் கிடைத்த போதும் மறுத்துவிட்டு ஊர் திரும்பி, பெற்றோர் மற்றும் நல்லவர்களின் ஆதரவோடு ஒரு படகையும் வாங்குகிறான். ஆனால் கடலுக்கு செல்லவிடாமல் பொறா மைக்காரர்கள் பிரச்னை எழுப்புகிறார்கள். தான் ஒரு மீனவன் தான் என்று நிரூபிக்கும் அருள் தனது தொழிலில் கவனமாக இருக்கிறான். அனைவரின் ஆசியோடு எஸ்தரை மணந்து மகிழ்ச்சியாக வாழ்கிறான்.

தங்களது மகனோடு மகிழ்ச்சியாக தொடரும் அவர்களது வாழ்வு ஒரு நாள் தலைகீழாகிறது. கடலுக்கு சென்ற அருள் பல நாட்களாக திரும்பாததால் அனைவரும் கவலையாகிறார்கள். ஒரு மழை நாள் இரவில் அருளின் தந்தை, படகில் சுடப்பட்டு இறந்து கிடக்கும் மகனின் உடலை வீட்டிற்கு எடுத்துவருகிறார். பெற்றோரும், மனைவியுமாக முடிவெடுத்து யாருக்கும் தெரியாமல் அருளப்பசாமியின் உடலை தோட்டத்திலேயே புதைத்து விடுகிறார்கள். தற்போது கோர்ட்டில் அருளப்பசாமியின் இறப்பு பற்றி ஏன் போலீசிடம் புகார் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுகிறது. இதுவரை சுடப்பட்டு இறந்துபோன மற்றும் இறந்துவரும் மீனவர்களுக்கு என்ன நியாயம் கிடைத்தது என்று எஸ்தர் கேள்வி எழுப்ப அதற்கான பதில் யாரிடமும் இல்லை. விடுவிக்கப்படும் எஸ்தரிடம் அருள் இறந்தது தெரிந்தும் ஏன் கடற்கரைக்குச் சென்று காத்திருக்கிறீர்கள் என்று போலீசார் கேட்கிறார்கள். அவரது உடல்தான் கரைக்கு திரும்பியது, ஆனால் அவரது ஆன்மா இன்னும் கடலில் தான் இருக்கிறது என்று பதிலளிக்கும் எஸ்தர் கடற்கரையில் காத்திருப்பதோடு படம் நிறைவடைகிறது.