ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 22–5–19

21 மே 2019, 04:09 PM

ஆன்­மி­கம் என்­பதே இசை­தான்!

‘பாடல்­கள் ஒரு கோடி.. எது­வும் புதி­தில்லை… ராகங்­கள் கோடி… கோடி… அது­வும் புதி­தில்லை. எனது ஜீவன் நீதான்.. என்­றும் புதிது’ எனத் தனது ரசி­கர்­க­ளைப் பார்த்து உரு­கும் ஒப்­பற்ற கலை­ஞர் இசை­ஞானி இளை­ய­ராஜா.

75 வய­துக்­கு­ரிய முதுமை, தன்­னைத் தொட்­டுப் பார்க்க அனு­ம­திக்­காத இந்த இளமை ராஜா, இசை­யு­ல­கின் எட்­டா­வது ஸ்வரம். தலை­மு­றை­கள் கடந்து கணி­னி­யில் மூழ்­கிக் கிடக்­கும் இன்­றைய தலை­மு­றை­யின் ஸ்மார்ட்­போ­னி­லும் லேப்­டாப்­பி­லும் குடி­யி­ருக்­கும் ராக­தே­வன். அவ­ரது 75-வது பிறந்­த­நா­ளைக் கொண்­டா­டும் வித­மா­கத் தமிழ் திரைப்­ப­டத் தயா­ரிப்­பா­ளர் சங்­கம் முன்­னெத்த ‘இளை­ய­ராஜா 75’ நிகழ்ச்­சி­யைக் காண உல­கம் முழு­வ­தும் வாழும் தமி­ழர்­கள் காத்­தி­ருந்த வேளை­யில்… அதற்­கான ஒத்­தி­கை­யில் ஈடு­பட்­டி­ருந்­த­வரை அவ­ரது இசைக்­கூ­டத்­தில் சந்­தித்து உரை­யா­டி­ய­தி­லி­ருந்து…

* இசை, ஆன்­மி­கம் இந்த இரண்­டுக்­கும் அப்­பால், இளை­ய­ரா­ஜாவை இத்­தனை இள­மை­யாக வாழ்­வித்­துக்­கொண்­டி­ருப்­பது எது?

இந்த இரண்­டுக்­கும் அப்­பால் எது­வு­மில்லை. இரண்டு என்­ப­தை­விட ஒன்று சொல்­வதே சரி. என் இசை­யும் ஆன்­மி­கம்­தான், ஆன்­மி­கம் என்­பதே இசை­தான். இள­மை­யாக இருக்க வேண்­டும் என்று யாரா­வது முயற்­சித்­தால் அது முடி­யாது. ஆகிற வயது ஆகியே தீரும்.

* உங்­க­ளது முதல் ஆர்­மோ­னி­யம் இன்­னும் உங்­க­ளி­டம் இருக்­கி­றதா?

இன்­னும் அதைப் பயன்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றேன். அண்­ணன்­கள் அதை கோய­முத்­தூ­ரி­லி­ருந்து வாங்­கிக்­கொண்டு வந்­தி­ருந்­தார்­கள். அதை நான் தொட்­டால், தொட்ட கையைப் பிரம்­பால் அடிப்­பார்­கள். அதைத் தொடாதே, கெட்­டுப்­போய்­வி­டு­வாய் என்­றார்­கள். அவர்­கள் இல்­லாத நேரத்­தில் அதைத் தொட்­டுத் தொட்­டுத்­தான் நான் கெட்­டுப்­போ­னேன். காத­ல­னும் காத­லி­யும் சந்­திப்­ப­தைப் போல, அண்­ணன்­கள் இல்­லாத நேரத்­தில் அதை எடுத்து வைத்து வாசித்து இசைக்­கக் கற்­றுக்­கொண்­டேன். எனக்­கா­கவே உரு­வாக்­கப்­பட்­டது என்­பது அந்த ஆர்­மோ­னி­யத்­துக்­குத் தெரி­யும். ‘எனக்­குள்­ளி­ருந்து வர வேண்­டிய இசை இன்­னும் எவ்­வ­ளவோ இருக்­கி­றது’ என்று அது அடிக்­கடி என்­னி­டம் கூறிக் கொண்­டி­ருப்­ப­தும் எனக்­குப் புரி­யும்.

* ‘நினை­வு­க­ளைத் தூண்டி விடு­வ­து­தான் உங்­கள் இசை­யின் உச்­சம். ஒவ்­வொரு பாட­லுமே வேறொரு உல­கத்­துக்கு அழைத்­துச் செல்­கி­றது’ என்­கி­றார்­கள். ரசி­கர்­க­ளுக்கு மட்­டும்­தான் இந்த உணர்வா; மெட்­ட­மைக்­கை­யில் நீங்­க­ளும் வேறொரு உல­கத்­தில்­தான் இருக்­கி­றீர்­களா?

என்­னி­டம் கதை­யை­யும், பாடல்­க­ளுக்­கான சூழ்­நி­லைக­ ளையும் கூற இயக்­கு­நர் மட்­டுமே வரு­வார். கூறி முடித்­த­பின் அவ­ரும் இருக்­க­மாட்­டார். ஆனால், இயக்­கு­நர் உரு­வாக்கி, அறி­மு­கப்­ப­டுத்­திய கதா­பாத்­தி­ரங்­கள் எனது அறை­யில் இருப்­பார்­கள். அப்­போது ஆர்­மோ­னி­யப் பெட்­டி­யில் கைவைத்­தால் மெட்­டு­கள் வந்­து­கொண்டே இருக்­கும். அது வேறொரு உல­கம் என்று நீங்­கள் அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொண்­டால் அது தவ­றில்லை. இன்­றும் அது விவ­ரிக்க முடி­யாத அனு­ப­வம்­தான். இசை­ய­மைத்­த­பின் ரசி­கர்­க­ளின் உணர்­வு­டன் எப்­படி அது கலக்­கி­றது என்­ப­தும், அதைத் தங்­க­ளு­டைய இசை­யாக எண்ணி அதில் அவர்­கள் எப்­ப­டிக் கரைந்து போகி­றார்­கள் என்­ப­தும் மிராக்­கிள்­தான்.

* உங்­கள் பாடல்­க­ளைத் திரை­யில் பார்த்­துக்­கொண்டே கேட்­பது, பார்க்­கா­மல் கேட்க மட்­டுமே செய்­வது என ரச­னை­யில் இருக்­கும் வேறு­பாட்­டைக் கவ­னித்­தி­ருக்­கி­றீர்­களா?

கேட்­ப­தற்­கும் பார்த்து உணர்­வ­தற்­கும் இடை­யில் வேறு­பாடு இருப்­ப­தாக நான் நினைக்­க­வில்லை. இருப்­பி­னும், இசை மட்­டுமே கரைந்­து­போ­கா­மல் இறுதி வரை எஞ்சி நிற்­கி­றது. காட்­சி­க­ளைப் பார்ப்­ப­தற்கு இசை துணை­பு­ரி­கி­றது. இசை­யைக் கேட்­டு­விட்டு, அதைக் காட்­சி­யு­டன் கண்டு ரசிக்க எதிர்­பார்ப்­பு­டன் திரை­ய­ரங்கு செல்­லும் பார்­வை­யா­ளர்­கள், பாட­லுக்­கான காட்­சி­க­ளைப் பார்த்து சரி­யாக ‘பிக்­ச­ரை­சே­ஷன்’ செய்­ய­வில்­லையே என நினைக்­கச் செய்த படங்­கள் அதி­க­முண்டு.

ஒரு இடை­வெ­ளிக்­குப்­பின் பாடலை நினைக்­கும்­போது அந்­தப் பாட­லுக்­கான காட்­சி­யும் நினை­வுக்கு வந்­தால் அது அந்­தக் காட்­சியை உரு­வாக்­கிய இயக்­கு­ந­ரின் திறமை, தனித்­தன்மை என்று எடுத்­துக்­கொள்­ள­லாம். ஆனால், எந்­தப் படத்­துக்­காக நான் இசை­ய­மைத்­தேன் என்­ப­தையே ஒரு சில ஆண்­டு­க­ளுக்­குப்­பின் மறந்­து­வி­டு­கி­றார்­கள். படத்தை மறந்­து­விட்­டுப் பாடலை மட்­டுமே நினை­வில் வைத்­துக்­கொள்­கி­றார்­கள். அவர்­க­ளது கவலை, துக்­கம் போக்­க­வும், தூங்­க­வும், ஏன் தூங்­கா­மல் உழைக்­க­வும் என் பாடல்­களை கூடவே வைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள்.