வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியில்லை: அமித் ஷாவை சந்தித்த பின் அய்யாக்கண்ணு அறிவிப்பு

08 ஏப்ரல் 2019, 01:32 PM

புதுடில்லி,

மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவதாக கூறிய நிலையில் டில்லியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு சந்தித்தார். பின்னர், தேர்தலில் நாங்கள் போட்டியிடப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளது விவசாயிகள், அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் - ஏப்ரல் ஆகிய மாதங்களில் டெல்லி - ஜந்தர் மந்தரில் தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமாக, மண்டை ஓடு அணிந்தும், பாம்பு, எலிக்கறி உண்டும், மண் சோறு சாப்பிட்டும், நிர்வாணப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களையும் நடத்தினர்.

இந்நிலையில், 2019இல் நடைபெறும் 17-வது மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து விவசாயிகள் போட்டியிடுவார்கள் என அய்யாக்கண்ணு அதிரடியாக அறிவித்தார். இதற்காக அவர்கள் வாரணாசி செல்லவும் திட்டமிட்டிருந்தனர்.

பாஜக தலைவர் அமித் ஷாவை டில்லியில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) அய்யாக்கண்ணு சந்தித்து பேசினார். அமித் ஷாவுடனான சந்திப்பில் பியூஷ் கோயல் மற்றும் தமிழக அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அமித் ஷாவுடனான சந்திப்பிக்கு பின் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில், அமித் ஷாவுடனான சந்திப்பு மன நிறைவை தருகிறது. பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடவில்லை என்று அய்யாகண்ணு தெரிவித்தார்.

பாஜக தேர்தல் அறிக்கையை தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இன்று காலை 11 மணிக்கு டில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமித் ஷாவுடன் சந்திப்புக்கு முன்பு, பாஜக தேர்தல் அறிக்கையில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்தால் வாரணாசியில் 111 விவசாயிகள் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடமாட்டோம் என அய்யாகண்ணு தெரிவித்திருந்தார்.