விஜய் படத்தில் இந்துஜா!

05 டிசம்பர் 2018, 05:30 PM

'சர்கார்' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு, கடந்த நவம்பர் 14-ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க அட்லீ இயக்கவுள்ள, இப்படத்தின் ப்ரீ புரொடக்க்ஷன்ஸ் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் அட்லீ.

இந்த படத்தின் படப்பிடிப்பு 2019 ஜனவரியில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் அடிபடுகிறது. படத்துக்கு பெயர் சூட்டப்படாததனால் தற்போது 'தளபதி 63' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. விஜய் –- நயன்தாரா இருவருமே இணைந்து 'வில்லு' படத்தில் நடித்திருக்கிறார்கள். 'சிவகாசி' படத்தில் விஜய்யுடன் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார் நயன்தாரா. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஜய் –- நயன்தாரா இணையும் 3-வது படமாக 'தளபதி 63' அமைந்திருக்கிறது.

முழுக்க விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ள இப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக இந்துஜாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் விளையாட்டு பயிற்சியாளராக விஜய் நடிக்கவுள்ளார்.