அவர்களுடன் நடிப்பது சவுகரியம்!

08 நவம்பர் 2018, 07:37 PM

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா -– விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `காற்றின் மொழி' படத்தின் பத்திரிகை யாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஜோதிகா பேசியதாவது:–

''ரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத்தான் இருக்கும். ஆனால் அந்த படத்தை பார்த்ததே கிடையாது. கதையோடு சேர்ந்து பயணித்து நடித்தேன். ஆனால் இப்படம் ஒரிஜினல் படத்தை போல இருக்காது. ‘காற்றின் மொழி’ படம் கதாநாயகியை சுற்றி வரும் கதை. வேலைக்கு போகும் பெண்ணை பற்றிய கதை. பெண்மையை உயர்த்தி பிடிக்கிற இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன்.

இந்த கதையில் பிடித்த அம்சமே ஒரு கணவன் – மனைவி இடையேயான உறவுதான். என்னை பார்க்கிறவர்களெல்லாம் ‘குஷி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். நிச்சயமாக நடிப்பேன்.

‘மொழி’ படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகின்றன. 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராதாமோகனுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

அதே நேர்மறையான உணர்வு. அந்த படத்தில் நடித்த முதல் காட்சியை போலவே இந்த படத்திலும் முதல் காட்சி நீளமாக அமைந்தது. முக்கியமான காட்சிகள் அனைத்தும் ஒரு மணி நேரத்திலேயே முடிந்தன.

இப்படத்தில் கணவன், மனைவி உறவு அருமையாக அமைந்திருக்கிறது. இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

ஒரு சில நடிகர்களுடன்தான் எந்த இடையூறும் இன்றி சவுகரியமாக நடிக்க முடியும். சூர்யா, அஜீத் மற்றும் மாதவன் இவர்களுடன் நான் அதை உணர்ந்திருக்கிறேன். இவர்களுக்கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக இருந்தது'' என்றார்.