ஒபாமா விருந்தில் பங்கேற்க இந்திய நடிகைக்கு அழைப்பு!

06 ஏப்ரல் 2016, 09:50 AM

வாஷிங்டன்:   

அமெரிக்க அதிபர் ஒபாமா அளிக்கும் விருந்தில் பங்கேற்குமாறு, இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   

அமெரிக்க அதிபர் ஒபாமா பதவிக்காலம் முடிவுக்கு வருவதை முன்னிட்டு, வெள்ளை மாளிகை வட்டாரம் இந்த மாதத்தில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் மிச்சேல் ஒபாமா உட்பட முக்கிய பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த விருந்தில் பங்கேற்க வருமாறு, இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், ஹாலிவுட் நட்சத்திரங்களான பிராட்லி கூப்பர், லூசி லியு, ஜேன் பான்டா, கிளாடிஸ் நைட் உட்பட பலருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.   

 அமெரிக்க டிவியில் வெளிவந்த ’குவான்டிகோ’ தொடர் மூலம், பிரியங்கா சோப்ரா புகழ் சர்வதேச அளவில் பரவியுள்ளது. அந்த தொடரில் நடித்ததால், பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதுகளில் விருப்பமான நடிகை என்ற விருதை பிரியங்கா பெற்றார். இப்போது மான்ட்ரியல் நகரில் ’குவான்டிகோ’ தொடரின் 2வது பாகத்தில் நடித்து வருகிறார். ஒபாமா விருந்தில் பங்கேற்பது குறித்து பிரியங்கா இதுவரை உறுதிசெய்யவில்லை.