ஹிந்தி நடிகர் அலோக் நாத் மீது பெண் தயாரிப்பாளர் விண்டா நந்தா பாலியல் புகார்

09 அக்டோபர் 2018, 07:45 PM

மும்பை,

இந்தி நடிகரான அலோக் நாத், 19 ஆண்டுகளுக்கு முன் பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பழம்பெரும் திரைப்படக் கதாசிரியையும், தயாரிப்பாளருமான விண்டா நந்தா குற்றம்சாட்டியுள்ளார்.

பிரபலமானவர்கள் செய்த பாலியல் வன்கொடுமைகள் பற்றி பெண்கள் தைரியமாக கூறும் மீடூ (Meetoo) இயக்கம் ஹாலிவுட்டில் துவங்கி தற்போது பாலிவுட் வரை வந்துள்ளது.

சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகரான நானா படேகர் மீது பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனுஸ்ரீக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல ஹிந்தி சினிமா மற்றும் தொலைகாட்சி நடிகரான அலோக் நாத் மீது பாலிவுட் கதாசிரியரும் தயாரிப்பாளருமான விண்டா நந்தா பாலியல் புகார் சுமத்தியுள்ளார்.

இது குறித்து தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள விண்டா நந்தா, 19 ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நட்சத்திரமாக திகழ்ந்த அலோக் நாத் வீட்டில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பங்கேற்க சென்ற போது மதுவில் போதை மருந்து கலந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தன் நண்பர்களிடம் கூறிய போது, அந்த சம்பவத்தை பற்றி வெளியே கூறாமல் மறந்துவிடும் படி அறிவுரை வழங்கினர். அதன்பின் ஒருமுறை அலோக் நாத் அவருடைய வீட்டிற்கு தன்னை வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்தார். தான் எதையும் வெளியே கூற முடியாமல் மனமொடிந்து போனதாக விண்டா நந்தா தன் பதிவில் தெரிவித்துள்ளார்.

விண்டா நந்தா தன்னுடைய பதிவில் அலோக் நாத்தின் பெயரை குறிப்பிடவில்லை. மாறாக அவரது கதாப்பாத்திரம் ஒன்றின் மூலம் அவருக்கு கிடைத்த  ‘மிகவும் பண்பட்ட மனிதர்’ என்ற பெயர் கொண்டு அலோக் நாத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மறைமுகமாக குறிப்பிட்ட போதும் பலர் அவர் அலோக் நாத்தை தான் குறிப்பிடுகிறார் என்பதை அறிந்து வெளிப்படையாக விண்டா நந்தாவுக்கு ஆதரவு வழங்கி வருகிறார்கள்.

விண்டா நந்தா புகார் தொடர்பாக மும்பையில் உள்ள சினிமா மற்றும் தொலைகாட்சி கலைஞர்களின் சங்கம் நடிகர் அலோக் நாத்துக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அலோக்நாத் போன்ற விலங்குகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களுக்கு நேர்ந்த கொடுமையை சத்தமாக வெளியில் கூற முன்வர வேண்டும் என்று விண்டா நந்தா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு பற்றி அலோக் நாத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘‘இதை நான் ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை. விண்டா கூறியது போல் நடந்திருக்கலாம்.வேறு யாராவது அதை செய்திருப்பார்கள்’’

‘‘இதை பற்றி நான் பேச விரும்பவில்லை. பெண்கள் பலவீனமானவர்கள் என்பதால் இந்த விவகாரத்தில் அவர்கள் கூறுவதை மட்டும் தான் கேட்பார்கள்’’ என அலோக் நாத் கூறியதாக ஊடக செய்திகள் தெரிவித்தன.

அலோக் நாத்தின் இந்த அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள டில்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால் ‘‘பாலியல் குற்றச்சாட்டுகளில் இருந்து எளிதில் தப்பிவிடலாம் என்ற அலோக் நாத் போன்ற ஆண்களின் மனநிலை தான் இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

மீடூ இயக்கத்திற்கு தன் ஆதரவை தெரிவித்துள்ள சுவாதி மாலிவால் பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி வெளிப்படையாக பேசுவதை வரவேற்றுள்ளார்.