அரியானாவில் ‘பத்மாவத்’ வெளியிடத் தடை

16 ஜனவரி 2018, 08:29 PM

சண்டிகர்,

சர்ச்சைக்குள்ளான ‘பத்மாவத்’ படத்தை திரையிட அரியானா மாநில அரசு தடை விதித்துள்ளது. இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் தீபிகா படுகோன் இப்படத்தில் நடித்துள்ளார்.

வரலாற்று கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘பத்மாவத்’ படம் ராஜ்புத் சமூகத்தினரை இழிவுபடுத்துவதாக சர்ச்சை ஏற்பட்டது.

சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு படம் மீண்டும் மத்திய தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. படத்தின் பெயரை ‘பத்மாவத்’ என்ற பெயரில் வெளியிட அறிவுறுத்திய தணிக்கை குழு படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கியது.

இதனை அடுத்து, ஜனவரி 25ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகள் ‘பத்மாவத்’ திரைப்படத்தை வெளியிட தடை விதித்துள்ளன.

இந்நிலையில், மனோகர் லால் கட்டார் தலைமையிலான அரியானா மாநில பாஜக அரசும் ‘பத்மாவத்’ படத்துக்கு இன்று தடை விதித்துள்ளது.

இன்று முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார்.

இந்தியப் பெண்களின் பெருமையாக கருதப்படும் சித்தூர் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் இழிவுபடுத்தப்படுவதை எள்ளவும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் விபுல் கோயல் கூறினார்.