கேரளாவில் ஆதரவற்றோர் இல்ல சிறுமிகள் பாலியல் பலாத்காரம் – 7 பேர் கைது

08 மார்ச் 2017, 01:33 AM

கேரளா,

கேரள மாநிலம் வயநாட்டில் ஆதரவற்றோர் விடுதியில் வாழும் 7 சிறுமிகளை, சில இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்து வந்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள போலீசார் இதில் சம்பந்தப்பட்ட 6 இளைஞர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், கல்பெற்றா அருகே உள்ளது முட்டில் என்ற இடம். இங்கு இருக்கும் ஆதரவற்றோர் விடுதியை சேர்ந்த 14-15 வயதே ஆன 7 சிறுமிகள் சில இளைஞர்களால் 2 மாத காலம் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர்.
சந்தேகப்படும் விதமாக விடுதியை சேர்ந்த சிறுமி ஒருத்தி, அடிக்கடி ஒரு கடைக்கு சென்று வருவதை ஆதரவற்றோர் விடுதியை சேர்ந்த பாதுகாவலர் ஒருவர் கண்டார்.

சிறுமியை தனியே அழைத்து விசாரித்ததில் அவர்கள் அந்த கடையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது பற்றி தெரிவித்தாள். உடனே காவல் துறையினருக்கு அனாதை விடுதி அதிகாரிகள் தகவல் அளித்தனர்.

சிறுமிகளுக்கு  மருத்துவ பரிசோதனை முடிந்த பின், அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சில இளைஞர்கள் சிறுமிகள் பள்ளிக்கு செல்லும் வழியில் இனிப்புகள் வழங்கி அருகில் இருந்த ஒரு கடைக்கு அழைத்து சென்றுள்ளது தெரியவந்தது.

அங்கு அவர்களை வலுக்கட்டாயமாக தங்கள் மொபைல் போனில் மோசமான படங்களைப் பார்க்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். நடந்ததை வெளியில் சொன்னால் சிறுமிகளை கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். 2 மாத காலம் இந்த செயலை அவர்கள் தொடர்ந்து செய்து வந்துள்ளனர்.

சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தை கொண்டு  குற்றத்தில் ஈடுப்பட்ட 6 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். குழந்தைகளுக்கான பாலியல் குற்றம் தடுப்பு சட்டம் உட்பட 11 பிரிவுகளின் கீழ் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கேரளா கண்ணூரில் 16 வயது பெண் ஒருத்தி பாதிரியார் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஆண் குழந்தை பெற்றெடுத்த செய்தி வெளிவந்தது.

கேரளாவில் இளம் சிறுமிகளுக்கு எதிராக தொடரும் பாலியல் வன்முறைகள் கேரள மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.