அறிமுகமே அமிதாப்பச்சனுடன்!

29 ஆகஸ்ட் 2016, 11:13 PM

தமிழ் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த ரெஜினா, பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் கதாநாயகியாக நடித்த ‘ராஜதந்திரம்’ படம் தமிழ் சினிமாவில் அவருக்கு நிலையான இடத்தை பெற்றுக் கொடுத்தது. தற்போது, செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’, அதர்வா நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கிலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவில் பிசியாக நடித்து வரும் ரெஜினா, தற்போது பாலிவுட்டிலும் அறிமுகமாகவிருக்கிறார். இவர் பாலிவுட்டில் அறிமுகமாகும் படமே பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழும் அமிதாப் பச்சன் படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. அமிதாப் பச்சன் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த ‘ஆங்கென்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது எடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்படத்தை அனீஸ் பாஸ்மி இயக்குகிறார். ரெஜினாவை இப்படத்தில் ஒப்பந்தம் செய்தது குறித்து இயக்குனர் கூறும்போது,  “ ‘ஆங்கென்- 2’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அழகான ஒரு புதுமுகம் தேவைப்பட்டது. அது மட்டுமில்லாமல், நன்றாக நடனம் ஆடத்தெரிந்தவராகவும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் சிறப்பாக நடிக்கத் தெரிந்தவராகவும் தேவைப்பட்டது. அதற்கு ரெஜினா பொருத்தமாக இருந்தார் என்பதற்காக அவரை தேர்வு செய்தோம். இப்படத்திற்கு பிறகு அவர் பல உயரங்கள் தொடுவார்” என்று கூறினார். ரெஜினா இப்படத்தில் கவர்ச்சியிலும் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் மும்பையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.