'உண்மைக் கதைகள் போரடிக்குது' - வித்யாபாலன் சலிப்பு!

17 டிசம்பர் 2015, 12:25 AM

நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கையை அப்படியே நடித்து காண்பித்தவர் வித்யா பாலன். இவரது இயல்பான நடிப்பு பாலிவுட்டில் நல்ல பெயரை ஏற்படுத்தி கொடுத்தது. இதனால் பிரபலங்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்ட கதைகளை வித்யாபாலனிடம் கொண்டு சென்றனர்.

ஆரம்பத்தில் வாழ்க்கைப் பின்னணி திரைப்படங்களுக்கு ஓகே சொன்னவர், தற்போது மறுத்து வருகிறார். இதை மையப்படுத்தி பலரும் வித்யா விடம் பேச்சு கொடுக்க... வாழ்க்கை கதைகள் போரடித்து விட்டது. புதிய கதைகளை கொண்டு வாருங்கள் என ஓபனாக பேசிவிட்டார். மேலும் அவர் கூறுகையில்,

‘நான் நடிகை சில்க் சுமிதா வேடத்தில் நடித்தேன். அதில் இருந்து பிரபலங்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்ட கதையை வைத்து தயாராகும் படங்களில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க அழைப்பு வருகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கையை படமாக எடுத்தார்கள். அதில் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்க அழைத்தனர். இது போல் கர்நாடக சங்கீத பிரபல பாடகி எம்.எஸ்.சுப்புலட்சும், பாகிஸ்தான் முன்னள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, நடிகை சுசித்ரா சென் ஆகியோருடைய வேடங்களில் நடிக்கவும் அழைப்புகள் வருகின்றன.

இவை தொடர்பான கதைகளை என்னிடம் சொல்லிவிட்டார்கள். ஆனால் இந்த படங்களில் நடிக்க எனக்கு தயக்கமாக இருக்கிறது. வாழ்ந்து மறைந்தவர்களின் வேடங்களில் நடிக்கும் ஆர்வம் எனக்கு குறைந்து விட்டது.

திரைப்படத்துறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. முன்பெல்லாம் பெரிய பட்ஜெட் படங்கள்தான் ஓடும் என்ற நிலை மாறி, சிறிய பட்ஜெட் படங்களும் ஓடுகின்றன. காரணம் ரசிகர்கள் கதைக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நல்ல கதையம்சம் உள்ள படங்களைதான் தியேட்டருக்குச் சென்று பார்க்கிறார்கள். நல்ல கதையம்சம் உள்ள படங்கள்தான் இனி ஓடும் என்ற நிலை வந்திருக்கிறது. கோடிக்கணக்கில் செலவு செய்தாலும், கதை இல்லாவிட்டால் அந்த படங்கள் ஓடாது. எனவே நல்ல கதை உள்ள படங்களில் நடிக்கவே விரும்புகிறேன்' என்றார்.