ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு ஆஜராக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு

26 அக்டோபர் 2021, 01:54 PM

சென்னை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட  ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராகுவதிலிருந்து விலக்குக்கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக மூன்று விஷயங்களை அப்போலோ நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் முன்வைத்தது.

ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாக  நடந்துகொள்கிறது.

இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர் ஏராளமானோர் இன்னும் விசாரிக்கப்படாமல் இருக்கும் சூழலில், எங்களது மருத்துவர்களையே தொடர்ந்து விசாரணைக்கு அழைக்கின்றனர்.

நாங்கள் கொடுக்கும் தகவல்களையெல்லாம் ஆறுமுகசாமி ஆணையம் கசியவிடுகிறது. இதனால் எங்கள் நற்பெயர் கெட்டுப்போகிறது. இதனால் இதை தடுக்கும்பட்சத்தில் நீதிமன்றத்தை நாடக்கூடிய உரிமை எங்களுக்கு இருக்கிறது.

அந்த உரிமையின் அடிப்படையில்தான் ஆறுமுகசாமி ஆணையம் முன்பு விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று தெரிவிக்கிறோம்.

ஆணையத்தை கலைக்க நாங்கள் கோரவில்லை. ஆனால் ஆணையத்தில் மருத்துவ வல்லுநர்கள் யாரும் இடம்பெறவில்லை. அப்படி இருக்க மருத்துவ ரீதியிலான விவரங்களை நாங்கள் எந்த அடிப்படையில் தெரிவிப்பது.

நீதிமன்றத்தில் என்ன விஷயங்கள் வேண்டுமானாலும் சமர்பிக்கிறோம். ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

மேலும், மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அப்போதைய அரசு கூறியதாலேயே சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டன.

ஜெயலலிதாவுக்கு பிரைவேசி தேவைப்பட்டதாக கூறி சிசிடிவி கேமராக்கள் அகற்றபட்டன என்று அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை ஆணையத்தின் காலம் 9வது முறையாக நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017- ஆம் ஆண்டு தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. இதுதொடா்பாக ஜெயலலிதாவின் உறவினா்கள், சசிகலா மற்றும் அவரது உறவினா்கள், அமைச்சா்கள் என 150-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் காலத்தை 9-ஆவது முறையாக மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அக்டோபா் 24-ஆம் தேதியுடன் ஆணையத்தின் கால அவகாசம் முடிவடைந்ததையொட்டி, ஆணையத்தின் காலத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசுக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, மேலும் 3 மாதங்களுக்கு (ஜனவரி 24) ஆணையத்தின் காலத்தை நீட்டித்து தமிழக அரசு சனிக்கிழமை (அக்டோபர் 24) உத்தரவிட்டது