இந்திய சினிமாவின் உயரிய விருதை பெற்ற சூப்பர் ஸ்டார்

25 அக்டோபர் 2021, 07:25 PM

சினிமா துறையில் பேரும் புகழும் எவ்வளவு விரைவில் கிடைக்கிறதோ அவ்வளவு விரைவில் மறைந்து போகும் சூழலும் உள்ளது. அவைகளை கடந்து  திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த உயரிய விருதை இதுவரை அமிதாப் பச்சன், கே.பாலசந்தர், சிவாஜிகணேசன் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர். இந்த நிலையில் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்துக்கு 2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. இன்று டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.