மிஷ்கின் திறனை பார்த்து வியந்த தயாரிப்பாளர்..! மீண்டும் இணையும் பிசாசு 2 கூட்டணி

12 அக்டோபர் 2021, 10:25 PM


ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் ‘பிசாசு 2’ திரைப்படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்குகின்றார். கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க உடன் பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். திண்டுக்கல்லில் 3 கட்டமாக நடைபெற்ற ‘பிசாசு 2’ படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து இயக்குனர் மிஷ்கின் அடுத்தக்கட்ட வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார். பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்க சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

திரையரங்குகளில் ‘பிசாசு 2’ வெளியாகும் என்று கூறிய தயாரிப்பு தரப்பு விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு தேதி அறிவிக்கப்படும் என்று கூறிருந்தது. இதனிடையே பிசாசு 2 படத்தில் மிஷ்கினின் திறனைப் பார்த்து வியந்த தயாரிப்பாளர் டி. முருகானந்தம் மீண்டும் அவரோடு இணைந்து ஒரு படம் பணியாற்ற ஆர்வம் தெரிவித்துள்ளார். மிஷ்கின் இயக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் வித்தார்த் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பிசாசு 2 படத்தின் ரிலீஸுக்கு பின் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.