பூஜையோடு துவங்கிய ஜி.வி.பிரகாஷ் - சீனுராமசாமி படம்...

04 ஆகஸ்ட் 2021, 11:48 AM

தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி, சமீபத்தில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அப்படம் அவரது வழக்கமான பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படைப்பாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

  நடிகர் GV பிரகாஷ் குமார் நடிப்பில் அவர் இயக்கவுள்ள இந்த படம்,  கிராமத்து பின்னணியில் முழுக்க முழுக்க ஆக்சன் திரில்லராக உருவாக உள்ளது. இதில் சீனுராமசாமியின் ஃபேவரட் நாயகியான காயத்திரி தான் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் அவர் செவிலியர் பாத்திரத்தில் நடிக்கிறார். MS பாஸ்கர், கஞ்சா கருப்பு உட்பட பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். 

இந்த படத்தின் நாயகி  கதாப்பாத்திரம் வாழ்க்கையின் மூன்று நிலைகளில் பயணிக்கிறது. பள்ளி மாணவி, வேலை செய்யும் பெண் மற்றும் ஒரு தாய். இந்த மூன்று நிலைகளிலும் தன் நடிப்பால் நியாயம் செய்வார் காயத்திரி என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவர் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் செவிலியராக இப்படத்தில் நடிக்கிறார். சீனு ராமசாமியின் முந்தைய திரைப்படங்களைப் போலவே, இப்படத்திலும் பெண் கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கான ஷூட்டிங்கை பூஜையுடன் துவங்கியுள்ளனர், தேனியில் 25 நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். விரைவில் படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.